வழக்கம் போல எங்களுக்காக டாக்ஸி டிரைவர் முகமது காத்திருந்தார். புல்மீல்ஸ் ஞானதேசிகன் சாயல். ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
கெய்ரோவின் பேக்கரியில் வாங்கிய பிரட்டையும் வெண்ணையையும் சாப்பிட்டு விட்டு டாக்ஸி ஏறினோம்.
கார் பழைய கெய்ரோவுக்கு பறந்தது.
எகிப்திய ஆண்களையும் பெண்களையும் வேடிக்கை பார்த்தபடி வந்தார் ஆர்னிகா. மனிதர்கள் அவருக்கு புத்தகங்கள் போல. யார் கிடைத்தாலும் அவர்களைப் படிக்காமல் விடமாட்டார். எண்பது வயது கிழவி என்றாலும் ஆறு வயது சிறுவன் என்றாலும் அவருக்கு ஒன்றுதான். அவர்கள் வயதுக்கு ஏறி அல்லது இறங்கி அவர்களுடன் உரையாடுவார். கண்ணை காதுகளை திறந்து வைத்து சுற்றி இருப்பனவற்றை முழுவதும் உள்வாங்குவது அவரின் சிறப்பு.
கார் சுஹைமி வீட்டுக்கு முன் போய் நின்றது.
பார்வை நேரம் காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை. கட்டணம் ஒருவருக்கு 406 ரூபாய்.
அந்தப் பழமையான வீடு கிபி 1648ல் ஷெய்க் அப்த் அல் வகாப் அல் டப்ளாவி என்பவரால் கட்டப்பட்டது.
ஓடோமான் மாம்லூக் கட்டடக்கலை வீடு அது.
பின்னாளில் கிபி 1796ல் ஷேக் முகமது அஸ் சுஹாய்மி அந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டில் 100 அறைகள். மஷ்ரபியா மரத்திலான வலைப் பின்னல் ஜன்னல்கள். மத்திய உள் முற்றம். பளிங்குத் தரைகள், மரத்திலான பால்கனிகள்
ஹம்மாம் குளியலறைகள், நீர் கிணறுகள், தானிய அரவை இயந்திரம். சிறிய தோட்டம்.
தர்ப் அல் அஸ்பர் தெருவுக்கும் அல் முஇஸ் தெருவுக்கும் இடையுள்ள அல் ஜமாலியா சந்தில் அந்த வீடு அமைந்திருந்தது.
வீட்டை இருவரும் ஒரு மணி நேரம் சுற்றி வந்தோம்.
ஆர்னிகாவின் பக்கெட் லிஸ்ட்டில் இருந்த இன்னொரு இடம் கிஸாவின் எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum)
ஒவ்வொரு தடவையும் கவுண்டமணி ‘கிடா வெட்டியாச்சா? கிடா வெட்டியாச்சா?’ என ஒரு படத்தில் கேட்பது போல ‘அருங்காட்சியகம் திறந்தாச்சா? அருங்காட்சியகம் திறந்தாச்சா?’ என நெட்டில் பரபரப்பார். கிராண்ட் எஜிப்சியன் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி திறக்கப்படுவது அறிந்து குத்தாட்டம் போட்டார் ஆர்னிகா.
கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 2000.
பார்வை நேரம் - காலை 9 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை. உலகின் அதி முக்கியமான அருங்காட்சியகங்களைப் பார்ப்போம்
* லூவர் அருங்காட்சியகம் - பிரான்ஸ் - 1792
* ஸ்டேட் ஹெர்மிடேஜ் அருங்காட்சியகம் - செயின்ட் பீட்டர்ஸ் பர்க்- 1764
* மெட்ரோ பாலிட்டன் அருங்காட்சியகம் - நியூயார்க்
* அமெரிக்கன் அருங்காட்சியகம் - நியூயார்க்
* பிரிட்டிஷ் அருங்காட்சியகம் - லண்டன்
* நேஷனல் அருங்காட்சியகம் - சீனா
* எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் - எகிப்து.
* உபிஸி அருங்காட்சியகம் - பிளாரன்ஸ்
* சயின்ஸ் அருங்காட்சியகம் - சிகாகோ
* அரண்மனை அருங்காட்சியகம் - பெய்ஜிங்
* இஸ்ரேல்அருங்காட்சியகம் - ஜெருசலம்.
* வாட்டிகன் அருங்காட்சியகம் - வாட்டிகன்
* போலிஷ் அருங்காட்சியகம் - வார்ஷா
* டோக்கியோ அருங்காட்சியகம் - டோக்கியோ
* சலார்ஜங் அருங்காட்சியகம் - ஹைதராபாத்
* கொரியன் அருங்காட்சியகம் - சியோல்
அருங்காட்சியங்களுக்குச் செல்வது சரித்திரக் காலத்திற்கு காலப்பயணம் போவது போல என்பார் ஆர்னிகா.
அருங்காட்சியங்களுக்கு செல்வது மூதாதையரை முத்தமிடுவது என்பார் ஆர்னிகா.
‘உனக்கு முன்னே கோடி பேர் சாதித்து விட்டு இறந்திருக்கின்றனர். அவர்களுக்கு முன் நீ ஒன்றுமே இல்லை’- என்கிற ஞானோதயத்தை தருபவை அருங்காட்சியங்கள் என்பார் ஆர்னிகா.
டெல்லிப் பொம்மைகள் ம்யூசியத்தில் ஆர்னிகா குதியாட்டம் கும்மாளம் பண்ணியது மறக்க முடியாத விஷயம்.
சுற்றுலா என எங்காவது சென்றால் ஆர்னிகா முதலில் பார்க்க விழைவது அருங்காட்சியகங்களைத்தான்.
எகிப்தின் பெரிய அருங்காட்சியகம், அலெக்ஸான்ட்ரா பாலைவனச் சாலையில் கிஸா கவர்னரேட்டில் அமைந்திருக்கிறது.
இந்த அருங்காட்சியகம் முழுமையாக 01.11.2025 அன்று திறக்கப்பட்டது.
ஆனால் நாங்கள் போனபோது பகுதி திறந்திருந்தது.
அருங்காட்சியகம் 120 ஏக்கர் பரப்பளவு. 5 லட்சம் சதுர கிமீ விரிந்திருந்தது. காலரிகள் பகுதி 81, 000 சமீ. முன் மத்திய பகுதி 40000 சமீ. இந்த அருங்காட்சியகத்தின் ஆங்கிலப் பெயரான Grand Egyptian Museum என்பதன் சுருக்கமாக ‘ஜெம்’ (GEM) என்பர்.
எகிப்தின் பெரிய அருங்காட்சியகத்தில் ஒரு லட்சம் கலைப் பொருட்கள் உள்ளன. பார்வையாளர்கள் தினம் 25, 000 பேர். இந்த அருங்காட்சியகத்தின் தற்போதைய இயக்குனரின் பெயர் அஹமது கொனிம். இந்த அருங்காட்சியகத்தின் ஆர்க்கிடெக்ட் ஷேக் பு பெங்.
இந்த அருங்காட்சியகத்தில் டுட்டன்காமன் அரசனுக்கென தனி காலரி பிரிவு உள்ளது. அதில் 5398 கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மன்னர் குபு மற்றும் ராணி ஹெட்டிபெரஸ், யூயா, தூயா இவர்கள் தொடர்பான கலைப் பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.
இந்த அருங்காட்சியகம் 1992-ல் அறிவிக்கப்பட்டு 2005-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1. 2 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவில் 2025 நவம்பரில் கட்டி முடிக்கப்பட்டது. 1987-2011 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த பரூக் ஹோஸ்னி என்பவரின் மூளைக்குழந்தை இந்த அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகத்தில் 12 கண்காட்சி அறைகள் உள்ளன.
* பிரம்மாண்டமான அறை (அட்ரியம்) 10000 ச.மீ பரப்பளவு. கண்ணாடிக் கூரை. உள்ளிருந்து பார்த்தால் கிஸா பிரமிடுகள் தெரியும்.
இங்கு பிர்அவ்ன் ரமீஸஸ் II வின் சிலை உள்ளது. இந்த அரங்கில் இருந்து ஒரு பிரமாண்டமான படிக்கட்டு நம்மை 12 பிரதான கண்காட்சி அரங்குகளுக்கு இட்டுச் செல்கிறது.
பிரதான காலரிகள்
இதில் உள்ள கலைப் பொருட்கள் கெய்ரோ, லக்ஸார், மின்யா, ஸோகாக், அஸியூட் பெனி சூயப், பையூம், நைல் டெல்டா, அலெக்ஸான்ட்ரியாவிலிருந்து கொண்டு சேர்க்கப்பட்டவை.
அரங்கு ஒன்று - எகிப்திய நாகரிகத்தின் ஆரம்பகால தினசரி மற்றும் கலாச்சார வாழ்க்கை.
அரங்கு இரண்டு - பழங்கால மன்னர்கள் மற்றும் அரசிகளின் சிலைகள்.
அரங்கு மூன்று - தெய்வங்களின் சிலைகள் மற்றும் இறுதிச் சடங்குப் பொருட்கள்.
அரங்கு நான்கு - மத்திய இராச்சியகாலத்து சமூக வாழ்க்கை மற்றும் தினசரிப் பொருட்கள்.
அரங்கு ஐந்து - மத்திய இராச்சியகால மன்னர்களின் சிலைகள்.
அரங்கு ஆறு -மத்திய இராச்சியகால இறுதிச் சடங்குகள் மற்றும் வழிபாட்டுப் பொருட்கள்.
அரங்கு ஏழு - புதிய இராச்சியகாலத்து சமூகப்பண்பாடு.
அரங்கு எட்டு - புகழ் பெற்ற போர் மன்னர்கள் மற்றும் அரசர் சிலைகள். (இராமேசஸ் II ஹட்செப் சூட்)
அரங்கு ஒன்பது - புதிய இராச்சியகால வழிபாட்டு முறைகள் மற்றும் மத நம்பிக்கைகள்.
அரங்கு பத்து - பிந்தைய கால எகிப்திய சமூக வாழ்க்கை.
அரங்கு பதினொன்று - பிற்கால மற்றும் வெளிநாட்டு ஆட்சிக் காலத்து அரசச் சின்னங்கள்.
அரங்கு பனிரெண்டு - எகிப்திய நாகரிகத்தின் இறுதி நூற்றாண்டுகளில் கிரேக்க மற்றும் ரோமானிய தாக்கங்களுடன் கூடிய நம்பிக்கைகள்.
எகிப்தின் பெரிய அருங்காட்சியகத்தின் முக்கியமான அம்சங்கள் என்ன தெரியுமா?
* மன்னர் டுட்டன்காமனின் 11 கிலோ எடையுள்ள தங்கமுகமூடி, தங்க சிம்மாசனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
* ராமேசஸ் II ன் 35 அடி உயர சிலை (83 டன் எடை) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
*140 அடி நீளமுள்ள மன்னர் குபுவின் மரத்தாலான சூரியப் படகு இங்கு பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளது.
* பிரமாண்டமான 108 படிகளைக் கொண்ட படிக்கட்டு
* அருங்காட்சியத்தின் நுழைவாயிலில் தொங்கும் ஒபெலிஸ்க் அமைக்கப்பட்டுள்ளது.
* மறு சீரமைப்பு ஆய்வகங்கள், டிஜிட்டல் ஹோலோகிராம் காட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
* குழந்தைகள் அருங்காட்சியகம் உள்ளது.
* உணவகங்கள், கபேக்கள், மாநாட்டு மையம், நூலகம் மற்றும் நினைவுப் பரிசுகள் விற்கும் பிரமாண்டமான பரிசுப்பொருள் அங்காடி முதலியன இங்கு உள்ளன.
ஏறக்குறைய நான்கு மணி நேரம் 4000 வருடங்களுக்கு முந்தைய எகிப்துக்கு காலப் பயணம் போய்த் திரும்பினோம்