மனத்தெம்பு
சேனைக்கிழங்கு எடுக்க
மம்பட்டி
கட்டட வேலைக்கு
கடப்பாரை
படப்பு அடுக்க
பலகை
வத்தல் பருத்தி
மூட்டைகளை மூட்ட
கோணூசி என்று
அப்பாவின்
வேலைக் கருவிகள்
ஒரு மூலையில்...
களை வெட்ட செதுக்கி
களை பிடுங்க களைக்கொத்தி
கம்பு அறுக்க கம்பரகத்தி
நெல்லறுக்க அரிவாள்
தீப்பெட்டி ஒட்டும்
பலகை, கட்டை என்று
அம்மாவின்
வேலைக் கருவிகள்
ஒரு மூலையில்...
அடுக்கடுக்காய்
மேப்பட்டி பொதிகள்
கட்டைகள்
ஓரிடத்தில்
அக்காக்களுக்கானது.
தம்பி தங்கைகளின்
பள்ளிக்கூடப்
பைகளும்
அதில் சேர்ந்தன
எல்லாம்
ஒருகூட்டுக் கிளியாக...
கால் கை
வலித்தாலும்
ஓய்வெடுக்க
உடம்பு சொல்லும் ...
காலை ஒரு வேலை
மாலை ஒரு வேலை
சிட்டாகச் செய்வாள்
பிள்ளைகளைப்
பெரிய பிள்ளைகளாக்க
வேண்டுமென்ற
மனத்தெம்பில்...
- முனைவர் நா. சுலோசனா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.