முனைவர் நா. சுலோசனா

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காக்கிவாடன்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்த இவர், உள்ளூர் நடுநிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வியையும், ஆலங்குளம் அரசுப் பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியையும் தமிழ் வழியில் பயின்றார். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் இரண்டு முறை தேர்ச்சி பெற்றவர். தற்போது, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்மொழி (ம) மொழியியல் புலத்தில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஜி.வி.என்., கல்லூரி., எஸ்.எஸ்.டி.எம்., கல்லூரி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியிலும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
வட்டார வழக்குச் சொல்லாய்வு, ஊர்ப்பெயராய்வு, கரிசல் வட்டார சொலவடைகளைத் திரட்டுதல் என மொழி குறித்த ஆய்வுத் தளங்களில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர், 9 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 25 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்கள் மற்றும் 6 முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து வழிகாட்டியிருக்கிறார். பல ஆய்வாளர்களை உருவாக்கிய இவர் மொழி, இனம், சமூகம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை முத்துக்கமலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்விதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவர், பதிப்பாசிரியராக 10 ஆய்வு நூல்களையும் , பொதுப் பதிப்பாசிரியராக 13 நூல்களையும், தனித்து 22 நூல்களையும் படைத்திருக்கிறார். இன்றையத் தலைமுறையினர் சங்க இலக்கியச் சொற்கள் குறித்தும், வட்டார வழக்குச் சொற்கள் குறித்தும் அறிந்துகொள்ளும் வழியில், ‘மொழி அறிவோம்’ என்னும் வலையொளி வழியாக 500-க்கும் அதிகமான பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார். முத்துக்கமலம் மின்னிதழின் கட்டுரைகளுக்கான ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
தமிழ்நாடு அரசின் இளம் தமிழ் ஆய்வாளர் விருது, கம்பன் கழக ஆய்வுச் சுடர் விருது, ஆய்வுமாமணி, தமிழ்ப்பணிச் செம்மல், பாவாணர் பாராட்டுப் பரிசு, பாவாணர் தமிழ்ச்சுடர் விருது, தேனித் தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ்த்தேனீ விருது, மலேசியாவிலிருந்து பன்னாட்டு ஆசிரியர் விருது, திருக்குறள் ஆய்வுநெறிச் செம்மல், இலக்கியப் பொரொளி, தமிழ்மாமணி, ஆளுமைச் செம்மல் விருது, சிறந்த ஆய்வாளர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கதை - சிறுகதை
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
கட்டுரை - இலக்கியம்
கட்டுரை - சமூகம்
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.