வாழ வேண்டும் பெருவாழ்வு

முதுமையும் சுகமாகும்
இளமையாகும் பிள்ளைகளால் முதுமையும்
பெருஞ்செல்வம் பிள்ளைகளே என
மனச்சோர்வு, உடல்சோர்வு அறியாள்...!
முதுமையை அறியா இளமை அவள்
அன்பின் வடிவம் அம்மா!
அவள்தான் என் அம்மா!
தியாகத்தின் மறு உருவம் அவள்!
அவள் உடை நைந்திருந்தாலும்
நைந்துபோகாதது அவள் மனம்...!
நான் அழுதால் அவள் அழுவாள்
நான் சிரித்தால் அவள் சிரிப்பாள்
உயிருள்ள பொம்மை அவள்!
தொடர்ந்து நான்கைந்து பெண்பிள்ளைகள்
கொல்லவில்லை கள்ளிப்பாலால்
வளர்த்தாள் அன்பால்...
காத்தாள் கண்ணின்மணி போல்!
இரவும் பகலும் இமை சோரா உழைப்பாளி அவள்
சாப்பிடுகிறவர்களை வேடிக்கை பார்க்கலாம்
வேலை செய்பவர்களை வேடிக்கை பார்க்கக்கூடாது
போட்டி கூடாது, பொறாமை கூடாது என்றவள்
வேலை செய்வதில் மட்டும் பொறாமையைக் கற்பித்தவள்!
நான் சோர்ந்த போதெல்லாம்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு என
எனக்குத் தன்னம்பிக்கைத் தந்தவள்!
குறையைப் பார்ப்பதை விட நிறைவைப் பார்!
எளிமை ஏழ்மை அல்ல எனக் கற்றுக்கொடுத்தவள்!
பூனைப் பீ பொட்டலம் கட்டியது போல
சிறுகச் சிறுகச் சேகரிக்கும் சிக்கனம்
அதுவே அவள் வாழ்வின் இலக்கணம்...
ஆணுக்கு நிகர் பெண் என்று
சித்தாந்தம் படிக்காத அப்பா!
ஆணுக்கு நிகராய் ஓய்வறியா அம்மாவுக்கு
ஒத்தாசையாய் இருந்ததை
பல படைக்கலாம் இலக்கியம்...!
படித்தால் உலகம் உன்னை மதிக்கும் எனும்
படிப்பைப் படிக்காத முற்போக்கு அவள்!
எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்தாலும்
தன் பங்கையும் பங்கிட்டுக் கொடுக்கும்
வாழ்வின் சரிபாதி அம்மா!
பணத்தைவிட முக்கியம் குணமே எனப்
பிள்ளைகளை வளர்த்தது அவள் நல்மனமே!!
தன் பிள்ளைகளை ஊரார் மெச்ச
உள்ளூரப் பூரிப்படைவாள் மெத்த!
அவள்தான் என் அம்மா...!
ஈன்ற பொழுதினும் தன் மகளைச் சான்றோள்
எனக் கேட்டதாய் மகிழ்வுக்கு ஈடில்லை-அதுவே
மகள் தாய்க்கு ஆற்றும் உதவி...!
என் வாழ்வின் முதல் ஆசானும் அவளே!
ஆற்றுப்படுத்தும் ஆற்றுநரும் அவளே!
தன் ஆசையை நிராசையாக்கி
பிள்ளைகளின் ஆசையை நிறைப்பவள்...!
அவள்தான் அம்மா...!
இராப் பகல் உழைத்தாலும்
களைப்பு அறியாள்! சோர்வறியாள்!
எந்நிலையிலும் மனந்தளராள்!
பிள்ளைகளின் நினைப்பில் தன்னிலை அறியாள்...!
கோயில் குளம் அறியாள்!
குடும்ப நலன் காத்த தெய்வம் அவள்!
தனக்கென நாடா தியாக உருவம்
அதுவே அவளின் திரு உருவம்!
அன்னை என்னும் சொல்லில் மென்மை
கொண்டிருந்தாள் மனத்தில் வன்மை ...!
ஏழ்மையும் எளிமையும் அவள் வாழ்வு!
அதுவே அவளின் நிறைவாழ்வு...!
அவள் வாழவேண்டும் பெருவாழ்வு!
- முனைவர் நா. சுலோசனா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.