வட இந்தியாவில் அனுமனை ஞாயிற்றுக்கிழமை அல்லது உகந்த திதியான அமாவாசை மற்றும் துவாதசி நாட்களில் அல்லது அனுமானின் தோற்ற நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாளில் அவருக்கு ஜிலேபி மாலை அணிவித்து வழிபாடு செய்கின்றனர். ஆனால், தென்னிந்தியாவில் வடைமாலை அணிவித்து வழிபாடு செய்கின்றனர். இதில் எது சரியானது? வட இந்திய அனுமனுக்கு இனிப்பான ஜிலேபியும், தென்னிந்திய அனுமனுக்கு காரமான வடையும் என்று எப்படி வந்தது? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, ஒரு கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாயு பகவான், அஞ்சனை தேவிக்கு மகனாகப் பிறந்தவர் ஆஞ்சநேயர். ஒரு நாள் ஆஞ்சநேயரின் தாய் அவருக்கு அண்டத்தைக் காட்டி சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அதையேப் பழக்கமாக வைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் ஒரு நாள் பகலில் பசியாக இருக்கும் போது சூரியனைப் பார்த்தார். அது பழம் என்று எண்ணி அதைச் சாப்பிடலாம் என்று வாயு வேகமாக சென்றார். அதே சமயத்தில், ராகுவும் சூரியனைப் பிடிக்கச் சென்று கொண்டிருந்தார். ஆனால், தன்னைவிட ஆஞ்சநேயர் வேகமாக வருவதைக் கண்டு அவருக்கு ஒரு வரத்தை அளித்தார். அதாவது, நீ சூரியனைச் சாப்பிடாமல் விட்டுவிட்டால் நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன். அது என்னவென்றால், எனக்கு உகந்த தானியமான கருப்பு உளுந்தினால் செய்யப்பட்ட மாலைகளையும் உனக்கு அணிவதன் மூலமாக என் பிடியில் இருப்பவர்களது தோஷங்கள் மற்றும் துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்றார்.
அதன்படியே, வட இந்தியாவில் வற்றாத ஜீவநதிகள் இருப்பதினால் அங்கு கரும்பு விளைச்சல் அதிகமாக இருக்கும். அதனால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரையைக் கொண்டு கருப்பு உளுந்தைச் சேர்த்து ஜிலேபியாகத் தயாரித்து அதை ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவித்தார்கள். அதேபோல், தென்னிந்தியாவில் அதிகமான உப்பு மற்றும் காரங்கள் விளைகின்றன. அதனால் அவைகளை ஒன்றாகச் சேர்த்து உளுந்தில் கலந்து வடை மாலையாக அணிவித்தார்கள். எனவே, வடக்குப் பகுதியில் இனிப்பான ஜிலேபியும், தெற்குப் பகுதியில் உளுந்த வடையும் மாலையாக அணிவிக்கப்படுகின்றன.
அனுமனுக்கு 27, 54, 108, 1008 என்பது போன்ற எண்ணிக்கைகளில் மாலை அணிவிப்பார்கள். அனுமன் ஜெயந்தி போன்ற தினங்களில் ஒரு லட்சத்து எட்டு வடைகளை கொண்ட மாலைகளை அணிவிக்கின்றனர்.
எனவே, ராகுவினால் ஏற்பட்ட தோஷங்கள் விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனுமனுக்கு வடை மாலைகளைச் சார்த்தி வழிபாடு செய்து பயனடையலாம்.