ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் அழகான வீரத் தோற்றம் குறைந்து போய் விடும் என்ற கவலை அதிகமாகிப் போனது.
ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் இதைத் தீர்க்க என்ன செய்வது என்று கேட்டான்.
தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான்.
அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்த அவன், தலைமை மருத்துவனைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டான்.
ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்கும்படி உத்தரவிட்டான்.
மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சனைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான்.
அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்த அவர்கள், "வழுக்கைக்குத் தீர்வா? உன் மரணத்தை நீயாகத் தேடிக் கொள்ளாதே... பேசாமல் இரு..." என்று கூறினர்.
நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.
அரசனை இந்த நிலையில் சந்தித்தால் தங்களுக்கும் தலைமை மருத்துவனைப் போல் சிறைதான்... என்று முடிவு செய்தனர்.
அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு கிடைக்கும்" என்று கூறினான்.
வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள்.
அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.
அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.
அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். "மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் உச்சந்தலையில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளரத் தொடங்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்துவிடும்" என்றான்.
மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே நான் இந்த மருந்தைத் தலையில் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.
அப்போது இளம் மருத்துவன், "மன்னா, இந்த மருந்து மிகவும் சக்தியுடையது. இந்த மருந்தைத் தாங்கள்தான் தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்தைத் தலையில் தடவும் நீங்கள் ஒரு எந்தக் காரணம் கொண்டும் குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது. அப்படி நினைத்து விட்டால் இந்த மருந்து வேலை செய்யாது” என்றான்.
முட்டாள் மன்னனும் சரியென்று சொல்லி மருத்துவர்கள் அனைவருக்கும் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைத்தான். மருத்துவர்களும் அரசனிடமிருந்து தப்பித்ததுடன் பரிசும் பெற்றுக் கொண்டு போனார்கள்.
அரசன் மருந்துக் குடுவையைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான். மருந்தைத் தலையில் தடவ நினைத்த போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய நிபந்தனை நினைவுக்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று மருத்துவன் சொன்னதை நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.
மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.
ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் நிபந்தனை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.
பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தத் தொல்லைக்கு வழுக்கைத்தலையுடனே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.
சில நேரங்களில் பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.