சூரிய வம்சத்து அரசனாகிய திரிசங்கு என்பவன் மனித உடலுடன் சுவர்க்கம் செல்ல வேண்டுமென்று ஆசை கொண்டான்.
அவனுக்குப் போகவல்ல சக்தியைத் தனக்கு அருள வேண்டும் என்று அவனது குலக்குருவாகிய வசிஷ்டரை வேண்டினான். அவர் தம்மால் அவ்வாறு செய்ய இயலாது என்று சொல்லி விட்டார்.
அதன் மேல் அந்தத் திரிசங்கு அவர் பகைவராகிய விசுவாமித்திரர் என்னும் மகரிஷியிடம் சென்று தன் எண்ணத்தை எடுத்துரைத்தான்.
விசுவாமித்திரர் தன்னுடைய தவ வலிமையால் அவனைச் சுவர்க்கத்திலிருந்து அனுப்பினார்.
ஆனால், தேவர்களின் அரசனான இந்திரன், அவனை சுவர்க்கத்திலிருந்து தள்ளி விட்டான். அவன் கீழே விழுகையில் விசுவாமித்திரரை அலறிக் கூப்பிட்டு, “உதவி!உதவி!” என்று வேண்டினான்.
இதைக் கண்ட விசுவாமித்திரர் மனமிரங்கித் தன் தவ வலிமையால் அவனை அப்படியே நிறுத்தினார்.
இதனால் திரிசங்குக்குச் சுவர்க்கமும் இல்லை, இந்தப் பூமியுமில்லை என்றாகி விட்டது.
இப்படி இடைநிலையில் இருந்ததால் அவன் அனைவராலும் இகழ்ந்து பேசப்பட்டான்.
அவனுடைய இந்த நிலைக்குக் குருவின் கட்டளையை மீறியதே முதற்காரணமாக இருக்கிறது.
இதனால்தான் இன்றும் ஆதரவற்றவர்களின் நிலையை “திரிசங்கு சுவர்க்கமடைந்தவன்” என்று சொல்கின்றனர்.