துறவி ஒருவர் தனது சீடர்களுடன் ஒரு ஊரின் ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தார். துறவி வந்திருப்பதை அறிந்த அவ்வூர் மக்கள் அங்கு வந்து அவரை வணங்கி ஆசி பெற்றுச் சென்றார்கள்.
அந்த ஊரின் தற்பெருமை மிகுந்த பணக்காரன் ஒருவன் ஊர் மக்களெல்லாம் அந்தத் துறவியிடம் ஆசி பெற்று வருகிறார்களே நாமும் சென்று ஆசி பெற்று வருவோம் என்று வந்தான்.
அவன் தன்னுடன் ஒரு நாற்காலியையும் எடுத்து வந்திருந்தான்.
அதைத் துறவி முன்பு போட்டு அதில் அம்ர்ந்தபடியே பேசினான். கீழே அமர்ந்திருந்த துறவியும் அவனின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
"எவ்வளவு பெரிய ஞானி நம் துறவியார். அவரிடம் இப்படி மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறானே"என்று அந்தத் துறவியின் சீடர்கள் கோபமடைந்தனர்.
பணக்காரன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
அங்கிருந்த சீடர்களில் ஒருவன், "உயர்ந்த இடத்தில் அமர வேண்டியவர் நீங்கள். கீழே அமர்ந்து பணிவாய்க் கேட்க வேண்டியவன் அவன். ஆனால் இங்கே பணக்காரன் உங்களுக்கு முன்னால் நாற்காலியில் அமர்ந்து பேசியது எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை. உங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை எங்களால் தாங்க முடியவில்லை." என்று புலம்பினான்.
மற்ற சீடர்களும் அவனது கருத்தை ஆமோதித்தனர்.
உடனே துறவி, "அமர்கின்ற இடத்தில் உயர்வு தாழ்வு இல்லை. எனக்கு எந்த அவமானமும் ஏற்ப்டவில்லை" என்றார்.
ஆனால் சீடர்களுக்கு அவரது பதில் திருப்தி அளிக்கவில்லை.
அதையறிந்த துறவி அவர்களை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த காட்டிற்குள் சென்றார்.
அங்கு மரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு ஒன்றைக் காட்டி, "சீடர்களே இந்த குரங்கைப் பாருங்கள். இது மரத்தின் மேல் உயர்ந்த இடத்தில் உள்ளது. நாமோ கீழே நிற்கிறோம். உயர்ந்த இடத்தில் இருந்தாலும் குரங்கு குரங்குதானே. அதற்கு என்ன பெருமை இருக்கிறது?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட சீடர்கள் அமைதியடைந்தார்கள்.
ஒருவன் இருக்குமிடத்தை வைத்து அவனுக்கு மதிப்புகள் கிடைப்பதில்லை. அவனுடைய நன்னடத்தையை வைத்துத்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.