கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பால் பாயாசம் வழங்கப்படுகிறது.
இக்கோயிலில் பால் பாயாசம் வழங்கப்படுவதற்கு ஒரு கதை இங்குள்ளவர்களால் சொல்லப்படுகிறது. வாங்க, அந்தக் கதையைப் படிக்கலாம்;
அம்பலப்புழையை ஆண்ட அரசனுக்குச் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது. அத்துடன் தன்னை யாரும் சதுரங்க விளையாட்டில் வெல்ல முடியாது என்கிற எண்ணமும், அதன் மூலம் ஏறபட்ட கர்வமும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் ஒரு நாள், வயதான துறவி ஒருவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். அவரை வரவேற்று விருந்தளித்த அரசன் அவரிடம், தன்னுடைய சதுரங்க விளையாட்டுப் பெருமையைப் பேசிக் கொண்டே இருந்தான். தொடர்ந்து, இந்தச் சதுரங்க விளையாட்டில் தன்னை யாரும் தோற்கடிக்க முடியாது என்றும் சொன்னான்.
உடனே அந்தத் துறவி, “மன்னா, சதுரங்க விளையாட்டில் நீ திறமையானவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நாமிருவரும் சேர்ந்து சதுரங்கம் விளையாடலாமா? என்றும் கேட்டார். அரசனும் அதற்குச் சம்மதித்தான்.
அரசன் அந்தத் துறவியிடம், “இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்றால், எனக்குப் பரிசாகத் தர உங்களிடம் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.
அந்தத் துறவி, “மன்னா, துறவியான என்னாலும் உனக்கு நல்ல பரிசைத் தர முடியும். ஒருவேளை, இந்தச் சதுரங்கப் போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டால் நீ எனக்கு என்ன பரிசு தருவாய்” என்று கேட்டார்.
உடனே அரசன், “சுவாமி, இந்தப் போட்டியில் நான்தான் வெற்றியடைவேன். நீங்கள் சொல்வது போல் ஒரு வேளை நீங்கள் வெற்றி பெற்று விட்டால், நீங்கள் கேட்கும் பரிசை வாங்கிக் கொள்ளலாம்” என்றான்.
அதைக் கேட்ட துறவி, “மன்னா, எனக்குப் பரிசாகப் பெரிதாக எதுவும் தர வேண்டாம், சதுரங்கத்தில் இருக்கும் 64 கட்டங்களுக்கும் நெல்மணிகளைப் பரிசாகத் தந்தால் போதும்” என்றார்.
உடனே அரசன், “பரிசுப் பொருளாக வெறும் 64 நெல்மணிகள் உங்களுக்குப் போதுமா?” என்று கேட்டான்.
உடனே துறவி, “மன்னா, துறவியான எனக்கு இந்தப் பரிசு போதும். சதுரங்கக் கட்டத்தில் முதல் கட்டத்திற்கு ஒரு நெல்மணி தர வேண்டும், இரண்டாவது கட்டத்தில் இரண்டு, மூன்றாவது கட்டத்தில் நான்கு, நான்காவது கட்டத்தில் பதினாறு, ஐந்தாவது கட்டத்தில் 256 என்று அதன் மடங்குகளாகத் தர வேண்டும் அவ்வளவுதான்” என்றார்.
அரசன் இந்த ஆட்டத்தில் தான் வெற்றி பெற்று விடுவோம் என்கிற கர்வத்தில் சிறிதும் சிந்திக்காமல் அதற்கு ஒப்புக் கொண்டான்.
போட்டி தொடங்கியது. சில மணி நேரத்தில் அந்தத் துறவி சதுரங்க ஆட்டத்தில் வெற்றியடைந்தார்.
அரசன் ஒரு துறவியிடம் தோல்வியடைந்ததை நினைத்து வருந்தினான். பின்னர் அவன் துறவிக்கு நெல்மணிகளைப் பரிசாகக் கொண்டு வந்து தரும்படி உத்தரவிட்டான்.
முதல் கட்டத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது கட்டத்தில் இரண்டு, மூன்றாவது கட்டத்தில் நான்கு, நான்காவது கட்டத்தில் பதினாறு என்று பெருக்கி நெல்மணிகளை வழங்கிக் கொண்டேயிருந்தான். சில கட்டங்களுக்குள் அவனுடைய களஞ்சியத்திலிருந்த நெல்மணிகள் அனைத்தும் காலியாகி விட்டன. அடுத்த சில கட்டங்களுக்கு அருகிலிருந்த அரசர்களிடம் கடனாகப் பெற்று நெல்லை வழங்கினான். அப்படியும், தொடர்ந்து நெல்மணிகளைத் தரமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அவனுடைய தவறு அவனுக்குப் புரிந்தது.
துறவியின் காலில் விழுந்த அவன், தன்னால் சொன்ன பரிசைத் தர முடியவில்லை என்று சொல்லி மன்னிக்கும்படி வேண்டினான்.
அப்போது, அந்தத் துறவியின் உருவிலிருந்த கிருஷ்ணர் அவனுக்குக் காட்சியளித்து, “மன்னா, உன்னிடமிருக்கும் விளையாட்டுத் திறனைப் பெரிதாக நினைத்துக் கர்வம் கொண்ட உனக்கு நல்வழி காட்டவே நான் இங்கு வந்தேன். எனக்கு இன்று நீ பட்ட கடனை உடனடியாக அடைக்க வேண்டாம், சிறிது சிறிதாக அடைத்தால் போதும். அம்பலப்புழாவிலிருக்கும் எனது கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயாசத்தை வழங்கிக் கொண்டே இரு. அது போதும்…” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
அன்று முதல், அரசனால் வழங்கப்பட்ட பால் பாயாசம் அம்பலப்புழா கோயிலில் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.