ஔவையார் நடந்து வந்த களைப்பு தீர ஒரு சிவாலயத்திற்குச் சென்று சிவலிங்கத்திற்கு நேராகக் காலை நீட்டி ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்தார்.
ஔவையாரின் இந்தச் செயல் உமாதேவிக்குப் பிடிக்கவில்லை.
“கர்வம் பிடித்த கிழவி. இந்த வயசாகியும் கர்வம் போகவில்லை. சுவாமி! உங்களுக்கு முன்பே இப்படி கால் நீட்டி அமர்ந்து இருக்கிறாளே?” என்றார்.
“அவள் இஷ்டப்படி அமர்ந்துவிட்டுப் போகட்டும். தேவையில்லாமல் பேசி வம்பை இழுக்காதே” என்றார் சிவபெருமான்.
“இல்லை சுவாமி! இவளுக்கு தான் என்கிற அகம் அதிகம். நானாவது இவளிடம் கேட்டு இவள் கர்வத்தை அடக்குகிறேன்” என்றாள் உமாதேவி.
“சரி! உன் இஷ்டம்” என்றார் சிவபெருமான்.
அவள் முன் தோன்றிய உமாதேவி, “கிழவி உனக்கு ஞானம் இருக்கிறதா? சுவாமிக்கு முன் இப்படி காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறாயே? இது சரியா?” என்றார்.
ஔவையார் எழுந்து, “பராசக்தியே உங்களை வணங்குகிறேன். சிறியேன் செய்த பிழையைத் தேவி பொறுத்தருள வேண்டும்” என்றார்.
“நீ யார்? பரந்து விரிந்த சிந்தையுடையவர். ஔவைக்கிழவி. நீயே இப்படி செய்வது உன் கர்வத்தினால்தானே?” என்றார் உமாதேவி.
“தாயே! நீங்கள் சர்வலோக மாதா. நான் சின்னப்பெண். குழந்தைகள் செய்த குற்றத்தைத் தாய் பொறுத்துக் கொள்ள வேண்டாமா? சுவாமி முன் காலை நீட்டி அமர்ந்து விட்டேனா? மன்னிக்க வேண்டும். அம்மா, தாங்களே சுவாமி இல்லாத இடத்தைக் காட்டுங்கள். அந்தப் பக்கமாகக் காலை நீட்டி அமர்ந்து கொள்கிறேன்” என்றார் ஔவையார்.
தேவி என்ன பதில் சொல்வாள்? சுவாமி இல்லாத இடம் ஏது? சுவாமிதான் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவனாயிற்றே...!
ஔவையிடம் மன்னிப்பு கேட்டாள் உமாதேவி.