முப்பெருந்தேவியர்களுள் பார்வதி, மகாலட்சுமி ஆகியோர் வண்ண ஆடைகளை அணிந்திருக்க, சரஸ்வதி மட்டும் வெள்ளை நிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பது ஏனென்று தெரியுமா?
சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கமும் சேர்ந்திருக்கும். அவள் கல்வியின் தெய்வம். கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவேக் கல்வி தெய்வமான சரஸ்வதி தேவி வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். அதாவது, வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக் காட்டுகிறது.
வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளை ஆடையைச் சரஸ்வதிக்கு மட்டுமே அணிவிக்கின்றனர். உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாதக் கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும் என்பதையே அவள் அணிந்திருக்கு ஆடையின் வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.
பொதுவாக, நவராத்திரியில் நவமியன்று சரஸ்வதி பூஜை நடத்துவர். இருப்பினும், சரஸ்வதியின் தோற்ற நட்சத்திரமான மூலத்தில் தொடங்கி, பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் சரஸ்வதியை வழிபடவேண்டும் என்றும் சரஸ்வதி தேவிக்கான பூஜை விதிகள் குறிப்பிடுகின்றன. திருவாவடுதுறை ஆதீனத்தில், புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தன்று, ஏட்டுச் சுவடிகளில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்யும் வழக்கம் தற்போது வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.