ஒரு முறை எறும்புகள் எல்லாம் சேர்ந்து தங்கள் கூட்டத்தை நடத்தின.
அந்தக் கூட்டத்தில், “நாம் ஒன்றாக வரிசையாகச் சென்று கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு யானை வந்து நம்மை மிதித்து விடுகிறது. நம் கூட்டத்திலிருக்கும் எறும்புகளில் குறைந்தது ஆயிரம் எறும்புகளாவது இறந்து போய் விடுகின்றன... இதைத் தடுக்க இந்த யானைக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்று அனைத்து எறும்புகளும் புகார் தெரிவித்தன.
இதைக் கேட்ட எறும்புகளின் தலைவன், “ஆமாம், யானை மிகப்பெரிய உருவம். யானையிடமிருந்து நம்மைப் பாதுகாக்க, நாம் கடவுளிடம்தான் ஒரு நல்ல வரம் வாங்க வேண்டும்” என்றது.
“ஆமாம், நாம் கடவுளிடம் வரம் கேட்பது நல்லதுதான். எறும்பாகிய நாம் கடித்தால் கடிபட்டவர் இறந்து போய் விட வேண்டும் என்று வரம் கேட்க வேண்டும்” என்றன.
எறும்புகளின் தலைவன், “கடவுளிடம் வரம் வாங்குவது ஒன்று எளிமையானதில்லை. நம்மில் யாராவது கடவுளிடம் சென்று நமக்கான வரத்தைக் கேட்டு வர வேண்டும். எனக்கு வயதாகி விட்டது. நம்மில் வேறு யாராவது ஒருவரைத் தேர்வு செய்து கடவுளிடம் அனுப்பி வைக்கலாம்.” என்றது.
எறும்புகளும் தலைவனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, கடவுளைச் சந்தித்துத் தங்களுக்கான வரத்தைக் கேட்க ஒருவரைத் தேர்வு செய்தன.
கடவுளைத் தேர்வு செய்யப்பட்ட எறும்புக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடவுளைச் சந்திக்கத் தானே தகுதியானவர் என்று ஆணவம் கொண்டது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சில நாட்களுக்குப் பின்பு தேர்வு செய்யப்பட்ட எறும்பு கடவுளைச் சந்திக்க சென்றது. சில நாட்களுக்குப் பின்பு அந்த எறும்பு கடவுளைச் சென்று சந்தித்தது. தங்கள் எறும்புக் கூட்டத்தின் சார்பில் தங்கள் கோரிக்கையை முன் வைப்பதாகச் சொன்னது.
கடவுளும் அந்த எறும்பிடம் என்ன கோரிக்கை என்று கேட்டார்.
தான் எனும் அகந்தையுடன் வந்திருந்த அந்த எறும்பு கடவுளிடம், “ எறும்பாகிய நான் கடித்தால் இறந்து போய் விட வேண்டும்” என்று கேட்டது.
கடவுளும், “நீ கேட்ட வரத்தை உனக்குத் தந்தேன்” என்றார்.
கடவுளிடம் வரம் வாங்கிய மகிழ்ச்சியில் அந்த எறும்பு, கடவுள் கொடுத்த வரத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பியது.
கடவுளைக் கடித்தது. கடவுள் தன் கையினால் அந்த எறும்பை அடிக்க அது சாகும் நிலைக்குச் சென்றது.
உடனே அந்த எறும்பு, “கடவுளே, நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், நீங்கள் கொடுத்த வரத்தின்படி கடிபட்டவர் சாகாமல், கடித்த நானே சாகப் போகிறேனே...” என்றது.
கடவுள், “எறும்பே, நீ என்ன வரம் கேட்டாய்? எறும்பாகிய நான் கடித்தால் இறந்து போய் விட வேண்டும் என்று கேட்டாய். நீ கடித்தாய், இப்பொழுது நீ சாகப் போகிறாய்” என்றார்.
ஆணவப்பட்ட அந்த எறும்பு செத்தது.