என்னை விட கலைஞர் கருணாநிதி ஆற்றல் மிக்கவர். அவர் மாதிரி உடனுக்குடன் பதில் சொல்லவோ, நகைச்சுவை உதிர்க்கவோ யாராலும் முடியாது என்று கூறி இருக்கும் கவிஞர் கண்ணதாசன் ஒரு பழைய சம்பவத்தையும் குறிப்பிடுகிறார்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் நாங்கள் இருவரும் பணியாற்றி வந்த காலம் அது.
எனக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை... என்னால் எத்தனை கட்டை சுதியில் பாட முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அது.
ஒரு நாள் நானும் கலைஞரும் சேர்ந்து வந்து கொண்டிருந்த போது ஓரிடத்தில் மியூசிக் டைரக்டர் ஆர்மோனியப் பெட்டியுடன் அமர்ந்திருந்தார். அவரிடம் நான் சற்று குரலை உயர்த்திப் பாடி "எனக்கு என்ன கட்டை?" என்றேன்.
அருகிலிருந்த கலைஞரோ சட்டென்று, "உனக்குப் புத்திக் கட்டை" என்றதும் எங்களை மறந்து சிரித்தோம்.