மன்னர் கிருஷ்ண தேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார்.
அவர் மன்னரிடம், “அரசே, என்னுடைய தோட்டமும் பக்கத்து வீட்டுக்காரர் தோட்டமும் அருகருகில் உள்ளன. இரண்டு தோட்டத்துக்குமிடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னைமரம் உள்ளது. அந்தத் தென்னை மரத்தைப் பக்கத்துவீட்டுக்காரர்எனக்குவிற்றுவிட்டார். நான் அதைப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். தென்னை மரம் நன்றாக வளர்ந்து பயன் தரும் நிலையில் என்னுடைய மரம் எனக்குத் திரும்ப வேண்டும்…”என்கிறார்.
அதைக் கேட்ட அவையிலிருந்தவர்கள் அனைவரும்திடுக்கிட்டனர்.
அங்கிருந்த அமைச்சர், “விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கும் அந்த மனிதரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்”என்றார்.
உடனே தளபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாரானார்.
அப்போது மன்னர், “என்ன செய்யலாம்?”என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார்.
தெனாலிராமன், “தாங்கள் அனுமதி அளித்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்…” என்றார்.
மன்னர், “சரி”என்றார்.
தெனாலிராமன் அந்தநபரிடம்,“நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து வா…” என்று சொல்லி அவனை அனுப்பி விட்டார்.
மறுநாள்அந்த நபரும்,பக்கத்து வீட்டுக்காரனும் அரசவைக்கு வந்தனர்.
இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார்.
“நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா?” என்றார்.
அவன்,“ஆம், ஐயா!”என்றான்.
“சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு…”என்றார் தெனாலிராமன்.
அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான்.
சபையிலிருந்தவர்கள் அனைவரும் ஒன்றும் தெரியாமல் விழித்தனர்.
மன்னரும் தெனாலிரான், ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?”என்று திகைத்தார்.
பிறகு தெனாலிராமன் மரத்தை வாங்கியவரிடம், “சரி… இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை…”என்றார்.
அந்த மனிதரிடம் ஏமாற்றம் தெரிந்தது.
உடனே தெனாலிராமன் மரம் வாங்கியவனைப் பார்த்து, “அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ, அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்… நீ மரத்தை அவரிடம் வாங்கும் போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. எனவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டு விடு…” என்றார் .
திரும்பப்பெற்றவரிடம்,“நீ தென்னை மரத்தை விற்பனை செய்த போது காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்…? எனவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும்… அதை அவர் பறித்துக் கொள்ளஅவ்வப்போது நீ அனுமதிக்க வேண்டும். தடுக்கக் கூடாது; நீயும் பறித்துக் கொள்ளக் கூடாது…”என்றார்.
தெனாலிராமனின் புத்திசாலித்தனமான தீர்ப்பை மன்னரும் ஆமோதித்தார்.