வேடன் ஒருவன் வேட்டை நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் அவனுக்கு உண்மையாக உழைத்தது.
அவன் எப்பொழுது வேட்டைக்குச் சென்றாலும் அவனுடன் சென்றது. பல விலங்குகளை வேட்டையாட அவனுக்குத் துணை செய்தது. இரவு நேரத்தில் அவன் வீட்டைக் காவல் காத்தது.
இதனால் அவனிடம் செல்வம் சேர்ந்து கொண்டேயிருந்தது.
ஆண்டுகள் பல சென்றன. அந்த நாய்க்கு வயதாகி விட்டது. அதனால் முன் போல ஓடியாடி உழைக்க முடியவில்லை. வேட்டையிலும் விலங்குகளை அதனால் பிடிக்க முடியவில்லை.
"தன் நாய் சோம்பேறியாகி விட்டது. உழைக்காமல் தன்னை ஏமாற்ற முயல்கிறது." என்று நினைத்தான் அவன்.
ஒரு முறை வேட்டையில் பன்றியைத் துரத்திச் சென்ற நாய் அதனால் தாக்கப்பட்டுக் காயம் அடைந்தது. பன்றியும் தப்பித்துச் சென்று விட்டது.
தன் எண்ணம் சரிதான் என்று நினைத்த வேடன் அந்த நாய்க்குப் போதுமான உணவு போடுவது இல்லை. அதைக் கவனிப்பதும் இல்லை. அது தனக்கு செய்த சேவைகளை எல்லாம் மறந்தே விட்டான்.
பாவம் நாய் என்ன செய்யும்? அவன் வீட்டை விட்டு எங்கோ சென்று விட்டது.
காவலுக்கு நாய் இல்லாததை அறிந்தார்கள் திருடர்கள். வேடனின் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த விலையுயர்ந்த எல்லாப் பொருட்களையும் திருடிச் சென்றார்கள்.
பொழுது விடிந்தது.
பொருள்கள் திருடு போனதை அறிந்த வேடன் "என் காவல் நாய் இருந்திருந்தால் என் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து இருப்பார்களா? நன்றி மறந்த எனக்கு இந்தத் தண்டனை தேவைதான் " என்று அழுது புலம்பினான்.
எல்லாம் போன பின்பு அவன் அழுது புலம்பி என்ன பயன்?