சிவபக்தர் ஒருவரிடம் ஏழு சிவபக்தர்கள் வந்தனர். அவர்கள் அவரிடம், “புண்ணியத்தலங்களுக்குச் சென்று நீராடிவிட்டு வரலாம்” என்றனர்.
“புனித நதிகளில் நீராடினால் என்ன கிடைக்கும்?” என்று கேட்டார் அந்த சிவ பக்தர்.
“புனித நதிகளில் நீராடினால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். அதனால்தான் நாங்கள் வட நாட்டிலிருக்கும் பல புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களைத் தொலைத்துவிட்டு வரலாம் என்றிருக்கிறோம்” என்றனர்.
“அப்படியா? மிக்க மகிழ்ச்சி. இப்போதைய சூழ்நிலையில் என்னால் வர இயலவில்லை. பின்பு காலம் வாய்க்கும் போது ஒருநாள் அங்கு சென்று கொள்கிறேன் ” என்றார் அவர்.
அவர்களும் சரி என்றனர்.
சிவபக்தர் அவர்களிடம், “எனக்கொரு உதவி செய்யுங்கள்” என்றார்.
அவர்கள், “என்ன செய்ய வேண்டும்?” என்றனர்.
சிவபக்தர் அவர்களிடம் எட்டிக்காய் ஒன்றைக் கொடுத்து, “நீங்கள் நீராடும் புனித நதிகளில் இந்த எட்டிக்காயையும் மறக்காமல் நீராட்டி எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்றனர்.
அவர்களும் அதை வாங்கிக் கொண்டு அப்படியே செய்கின்றோம் என்றனர்.
ஒரு மாதம் கழிந்தது. அவர்கள் திரும்பி வந்தனர்.
அவர்கள் சிவபக்தரிடம் வாங்கிச் சென்ற எட்டிக்காயைத் திரும்பக் கொடுத்தனர்.
“இந்த எட்டிக்காயும் எங்களைப் போலவே அனைத்துப் புனித நதிகளிலும் நீராடிவிட்டு வந்திருக்கிறது” என்றனர் அவர்கள்.
கூடவே அவர்கள் தங்களது பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள், “எங்களது புனித நீராடலால் எங்கள் பாவங்கள் அனைத்தையும் கரைத்துவிட்டு வந்துவிட்டோம்.” என்றனர்.
உடனே அந்த சிவபக்தர், “மிக்க மகிழ்ச்சி” என்றார்.
அவர் கையில் வைத்திருந்த எட்டிக்காயை எட்டுத் துண்டுகளாக நறுக்கி ஆளுக்கொன்றாகக் கொடுத்தார்.
அவர்களும் அதை வாயில் போட்டுக் கடித்தனர். பின் “தூ...தூ...” என்று துப்பினர்.
சிவபக்தர், “என்ன எட்டிக்காய் கசக்கிறதா?” என்றார்.
அவர்கள், “எட்டிக்காய் கசக்குமென்று தங்களுக்குத் தெரியாதா?” என்று திருப்பிக் கேட்டனர்.
சிவபக்தர், “எட்டிக்காய் கசக்குமென்று எனக்கும் தெரியும். இந்த எட்டிக்காய் சாதாரணமானதில்லையே... இந்த எட்டிக்காய் தங்களைப் போலவே பல புண்ணிய நதிகளில் நீராடி வந்ததாயிற்றே... புண்ணிய நதிகளில் நீராடிய தங்களின் பாவங்களெல்லாம் அந்நதிகளில் கரைந்து போனது போல, இந்த எட்டிக்காயின் கசக்கும் தன்மையும் புண்ணிய நதிகளில் நீராடி வந்ததால் போயிருக்கும் என்று நினைத்தேன்” என்றார்.
புண்ணிய நதிகளில் நீராடி வந்து விட்டால் பாவம் அனைத்தும் போய்விடும் என்று நம்புவதை விட புண்ணியமாக சில நல்ல செயல்களைச் செய்யலாம்.