அனுமனுக்கு மட்டும் வடை மாலை சாத்துகிறார்கள். வேறு எந்தக் கடவுளுக்கும் வடைமாலை சாத்தும் வழக்கமில்லை. இது ஏன் என்று தெரியுமா?
ஆஞ்சநேயர் எப்போதும் ராம தியானத்தில் இருப்பவர். அவரை ராம தியானத்திலிருந்து கலைப்பது கடினம். ஆகவே ராம நாம ஜெபம் நாமும் செய்தால், எங்கேயோ ராம நாமம் கேட்கிறதே என்று அவர் நினைவு இவ்வுலகம் பற்றி வரும். அந்த ராம நாம ஜெபத்துடன் அவருக்கு வடை மாலையைச் சாத்த வேண்டும். மார்பில் ஏதோ வருத்துகிறதே என்று அம்மாலையைத் தொட்டுப் பார்ப்பார். அப்போதும் அவர் கண்களைத் திறக்காமல் ராமஸ்வரூபத்தையே நினைவில் கொண்டிருப்பார்.
குரங்கின் நடவடிக்கை எந்த மாலையைப் போட்டாலும் பிய்த்தெறிந்து அதைக் கடித்துத் துப்புவதுதான். ஆகவே வடைமாலையை அவர் பிய்த்துக் கடிப்பார். அதில் ராமநாம சுவையிருக்கிறதா? என்று பார்ப்பார்.
அதனால்தான் வடைக்கு உளுந்தை ஊறப்போடும் போதும், அரைக்கும் போதும்,வடை தட்டும் போதும், ராம நாம ஜெபம் அவசியம். ராம நாமம் வடையில் ஏற வேண்டும். சாதாரணமாக, குரங்குகளுக்கு இனிப்பு பிடிக்காது.
ருத்திராட்சத்திற்கு மாலையாகக் கட்டிக் கொள்ள இயற்கையாகவே துளை இருக்கும். அது போல் வடையை மாலையாகக் கட்டவே நடுவில் துளை வைத்துத் தட்டப்படுகிறது.