சுசீலர் என்ற அந்தணருக்கு சுவிருத்தன், விருத்தன் என்று இரு பிள்ளைகள் இருந்தனர்.
அவர்கள் இருவரும் பெரியவர்களானதும் ஒருநாள் பிரயாகை வந்து சேர்ந்தார்கள். அன்று ஜன்மாஷ்டமி தினமானதால் கோயிலில் விழா நடந்து கொண்டிருந்தது.
இருவரும் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் சிறுது தூரம் நடந்து சென்றிருக்க மாட்டார்கள், அதற்குள் மழை பெய்யத் தொடங்கி விட்டது.
இதனால் வழி தவறிய அவர்கள் அங்கிருந்த விலைமகள் ஒருத்தியின் வீட்டை அடைந்தார்கள்.
விலைமகள் வீட்டை அடைந்ததும் சுவிருத்தன் அங்கேயே தங்க விரும்பினான். பிறகு தன் தம்பியையும் அங்கேயே தங்கவும் வேண்டினான். ஆனால் அவனோ மறுத்து, எப்படியோ கோயிலைச் சென்று அடைந்தான்.
கோயிலில் பகவானுக்கு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. பக்தர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். ஆனால் விருத்தனின் மனமோ அங்கில்லை. அவன் தன் அண்ணன் விலைமகளின் வீட்டில் எப்படியெல்லாம் இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
விலைமகளின் வீட்டிலிருந்த சுவிருத்திரனுக்கும் மனம் அங்கில்லை. அவன் தன் தம்பியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். “என் தம்பி மிகவும் புண்ணியம் செய்தவன். அதனால் அவன் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தான். நான் என்ன பாவம் செய்தேனோ? இங்கு வந்து சேர்ந்தேன்” என்று நினைத்தபடியே அன்று முழுவதும் கோயிலைப் பற்றியும், அங்கு நடைபெறும் நற்செயல்களைப் பற்றியும் நினைத்தபடி இருந்தான்.
மறுநாள் பொழுது விடிந்ததும், இரு சகோதரர்களும் நதிக்கரையில் சந்தித்தார்கள். அப்பொழுது அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஒரு இடி இடிக்க அவர்கள் இரண்டு பேர்களும் மரணமடைந்தனர்.
சுவிருத்த்னை வைகுண்டத்துக்கு அழைத்துப் போக வைகுண்டத்திலிருந்து இரு விஷ்ணு தூதர்களும், விருத்தனை நரகத்திற்கு அழைத்துப் போக எம தூதர்கள் மூவரும் வந்திருந்தனர்.
எமதூதர்கள் தம்பியை இழுத்துச் செல்வதைப் பார்த்ததும் சுவிருத்தன், “இதென்ன அநியாயமாக இருக்கிறது? நேற்று முழுவதும் நான் விலைமகள் ஒருத்தியின் வீட்டிலிருந்தேன், அவனோ கோயிலில் இருந்தான். அவனையல்லவா வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்? என்னை வைகுண்டத்துக்கும், அவனை நரகத்திற்கும் மாற்றி அழைத்துச் செல்கிறீர்களே?” என்றான்.
இதைக் கேட்ட விஷ்ணு தூதர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். பின்னர், “இதில் எந்தத் தவறுமில்லை.அனைத்துத் தர்மங்களுக்கும் முதலில் மனச்சுத்தம்தான் காரணமாகும். மனதின் வழியாகத்தான் பாவமோ, புண்ணியமோ செய்யப்படுகிறது. மனம் எங்கிருக்கிறதோ அதைக் கொண்டுதான் பாவ, புண்ணியங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. உடல் எங்கிருக்கிறது என்பதைக் கொண்டு அவை நிர்ணயிக்கப்படுவதில்லை. நீ விலை மகள் வீட்டிலிருந்த போதிலும் இறைவன், கோயில் போன்ற நற்சிந்தனையில் இருந்தாய். உன் தம்பியோ கோயிலில் இருந்தாலும், விலைமகள், அவள் தரும் இன்பம் போன்ற சிந்தனையில் இருந்தான். அதனால் தான் உனக்கு வைகுண்டமும், உன் தம்பிக்கு நரகமும் கிடைத்திருக்கிறது” என்றனர்.