புத்தரிடம் கற்றறிந்த பிராமணர் ஒருவர் கடவுளைப் பற்றிக் கேட்டார்.
புத்தர் பதில் ஏதும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார்.
அதைப் பார்த்த அவர் சீடர் ஆனந்தனுக்கு ஏமாற்றம். ஏனெனில், அந்த பிராமணருக்கு சீடர்களின் எண்ணிக்கை அதிகம். அவர் மட்டும் பௌத்த மதத்திற்கு மாறி விட்டால் அவரைப் பின்பற்றி ஆயிரக் கணக்கானோர் பௌத்த மதத்திற்கு மாறி விடுவார்கள். ஆனால் புத்தர் மௌனமாகவே இருந்தார்.
சிறிது நேரம் கழித்து அந்தப் பிராமணர் புத்தரை வணங்கி நன்றி தெரிவித்து விட்டுப் போய் விட்டார்.
அவர் போனபின் ஆனந்தன் புத்தரிடம் நல்ல ஒரு வாய்ப்பை இழந்து விட்டதாகக் கூறி வருத்தப்பட்டார்.
புத்தர் சொன்னார், ''ஒரு நல்ல குதிரைக்கு சாட்டையின் நிழலே போதுமானது. அந்தக் குதிரையை சாட்டையினால் அடிக்க வேண்டியதில்லை. அவர் மன மாற்றம் அடைந்துவிட்டார்''
ஆனால் ஆனந்தனுக்கு அந்தப் பதில் திருப்தி அளிக்கவில்லை.
மறுநாள் காலை அந்தப் பிராமணர் ஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்தரிடம் வருவதைப் பார்த்த ஆனந்தனால் நம்ப முடியவில்லை.
அவர் அன்று இரவு புத்தரிடம், ''இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது? நீங்கள் கண்களை மூடி மௌனமாக இருந்தது அவரை அவமதிப்பதுபோல நான் உணர்ந்தேன். ஏனென்றால் அவர் முக்கியமான கேள்வி கேட்டு நீங்கள் சரியான பதில் சொல்ல மறுத்து விட்டீர்களே?''என்று கேட்டார்.
புத்தர் சொன்னார், ''இந்த மௌனம் ஒரு சூட்சுமமான பதில் ஆகும். அது அவருக்குத் தெரியும். கடவுளைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது. நான் ஏதாவது சொல்லியிருந்தால் என் மீது நம்பிக்கை இல்லாது அவர் போயிருப்பார். ஏனென்றால், நான் சொல்லும் கடவுள், கடவுளே அல்ல என்பதையேக் காட்டியிருக்கும். அதனால்தான் நான் என் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக இருந்தேன். கண்களைத் திறந்திருந்தால் கூட கண்களின் மூலம் நான் எதையோச் சொல்ல வருகிறேன் என்று அவர் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும். எனவே என் மௌனம்தான் சரியான பதில். அதை அவரும் ஏற்றுக் கொண்டார்''