ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான்.
அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.
துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.
அதைக் கண்ட துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.
அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.
துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அவன் தயங்கினான்.
"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.
அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து, "ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.
துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.