முரடனாயிருந்த ஒருவனுக்கு அவன் தந்தை அரண்மனையில் வேலை வாங்கித் தந்தார்.
அந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே உடனே தன் மனைவியைத் தேடி ஓடினான் அவன்.
வழியெங்கும் ஒரே மழை. வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. இருளில் தட்டுத் தடுமாறி ஆற்றைக் கடந்து, மரம் ஏறி வீட்டை அடைந்து கதவைத் தட்டினான். கதவைத் திறந்த அவன் மனைவிக்குப் “பகீர்” என்றது.
கணவன் நனைந்து வந்திருப்பதைக் கண்டாள்.
“இந்த மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்?” என்றாள்.
“ஒரு கட்டையைப் பிடித்து” என்றான்.
“கட்டையா...வெள்ளத்தில் பிணங்களல்லவா மிதந்து போய்க் கொண்டிருக்கின்றன? சரி மாடிக்கு எப்படி வந்தீர்கள்? கீழே கதவு பூட்டியிருந்ததே!”
“மர விழுதைப் பிடித்து ஏறி வந்தேன்”
விளக்கை எடுத்து வெளியே வந்து பார்த்தாள். மரத்தில் மலைப் பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது.
“அப்படி என்ன அவசரம்?” என்றாள்.
“உன்மேல் உள்ள அடங்காத ஆசை!”
“அழியப் போகும் இந்த உடம்பின் மீது அவ்வளவு ஆசையா? இவ்வளவு ஆசையும் ராமநாமத்தின் மேல் வைத்திருந்தால் நல்ல கதியாவது கிடைக்குமே!”
ஒரு கண நேரம் அவளது வார்த்தையைக் கேட்ட அவன் உள்ளத்திலும் வானத்திலும் ஒரே நேரத்தில் மின்னல் வெட்ட உண்மையை உணர்ந்தான்.
ராமநாம மகிமையை உளப்பூர்வமாக உணர்ந்து அமர கவியானான்.
அந்த அமர கவி யார் என்கிறீர்களா? வடமொழியில் துளசி ராமாயணம் எனும் புகழ்பெற்ற காவிய நூல் எழுதிய துளசிதாசர்தான் அவர்.