சண்பகவனம் எனும் காட்டில் ஒரு மானும் , ஒரு காகமும் நட்புடன் பழகி வந்தது.
மான் தன்னிச்சையாகப் புல் முதலியவற்றைத் தின்று நன்கு கொழுத்து இருந்தது.
அப்படி கொழுத்திருந்த மானைப் பார்த்து நரி ஒன்று பொறாமைப்பட்டது. அந்த நரி பலமுடன் இருக்கும் மானை எதிர்த்துக் கொல்வதென்பது நம்மால் முடியாது, எப்படியும் இந்த மானை வஞ்சனையால் கொன்று அதன் கறியை ருசித்துச் சாப்பிட வேண்டும் என்று தீர்மானம் செய்தது.
மெதுவாக மானின் அருகில் சென்ற நரி " நண்பரே நலமா? " என்று கேட்டது.
இதுவரை நம்மைப் பார்த்திராத நரி "நண்பரே" என்று அழைக்கிறதே என்று ஆச்சரியத்துடனும், அது அழைத்த விதத்தில் மயங்கியும் " நீ யார்?" என்று கேட்டது அந்த மான்.
"நான் இந்தக்காட்டில் தனியாக இருக்கிறேன். உன்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். யாருமில்லாத அனாதையாக வாழ்வதை விட சாவதே மேல் என்று சாகச் சென்று கொண்டிருந்த போதுதான் உன்னைப் பார்த்தேன். இனி உனக்கு வேலை செய்து கொண்டு, உன்னுடன் நட்பாய் இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்." என்றது நரி மிகவும் அமைதியாக.
மானுக்கோ பெரும் சந்தோஷம்.
தன்னிடம் வலிய வந்து நட்பு கொள்ளும் அந்த நரியின் நட்பை ஏற்றுக் கொண்டது.
இரண்டும் பேசிக்கொண்டே அங்கிருந்த சண்பக மரத்தடிக்கு வந்தது.
மானின் நண்பனான காகம் அந்த மரத்தின் மேல்தான் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அது தனது நண்பன் மான் ஒரு நரியுடன் வருவதைப் பார்த்து அதிர்ச்சியுற்றது.
" நண்பா, உன்னுடன் இருப்பது யார்? " என்று கேட்டது.
"இந்த நரிக்கு யாருமில்லையாம். இது என்னிடம் நட்பாக இருக்க விரும்பியது. சரி என்று நானும் அழைத்து வந்தேன்." என்றது மான் தனது பழைய நண்பனான காகத்திடம்.
"நண்பனே, திடீரென்று வந்த பழக்கமில்லாதவர்களை நம்பக் கூடாது. ஒருவனுடைய குலமும் நடத்தையும் தெரியாமல் இடம் கொடுத்தால் பூனைக்குக் கழுகு இடம் கொடுத்து இறந்தது போலாகி விடும். ஒருவரின் குணமறியாமல் நம்முடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது." என்றது காகம்.
காகத்தின் இந்த அறிவுரை நரிக்கு ஆத்திரமூட்டியது.
காட்டிக் கொண்டால் நாம் நினைத்த காரியம் நடக்காமல் போய்விடுமே என்கிற பயத்துடன் , "ஒருவருடைய குணத்தை பழகுவதற்கு முன்பு எப்படி தெரிந்து கொள்வது?. நல்லவர்களுக்கு குணத்தில் நோக்கமில்லை. அவர்களுடைய நட்பு முதல் பழக்கத்திலேயே வந்து விடும்." என்று பக்குவமாகப் பேசியது நரி.
நரியைப் பார்த்து, " நீ சும்மாயிரு நான் என் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்." என்றது காகம்.
தன்னுடன் முன்பு பழகிய காகம் ஒருநாள் கூட நம்மை நல்லவன் என்று சொல்லியதில்லை. ஒரே நாள் பழக்கத்தில் நம்மை நல்லவன் என்று சொல்லி விட்டதே என்று மானுக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது.
எனவே மான் காகத்தைப் பார்த்து, " அவனை நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். நீ எனக்கு எப்படி நண்பனோ அதைப்போல் இந்த நரியும் என் நண்பன்தான். சொல்லப் போனால் உன்னைக் காட்டிலும் இவன்தான் என் உயிர் நண்பன்." என்றது.
காகம் தன் வாயை மூடிக் கொண்டது.
பகலில் இரை தேடுவதும் இரவில் அந்த மரத்தடியில் சந்தித்துக் கொள்வதுமாக சில நாட்கள் கழிந்திருக்கும்.
ஒரு நாள் நரி மானிடம், "இந்தக் காட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்தில் பச்சைப்பசேலென்று பயிர் விளைந்திருக்கிறது. அந்தப் பயிரைச் சாப்பிட்டால் நீ இதைக் காட்டிலும் கொழுகொழுவென்று ஆவதுடன் பார்க்க அழகாகவும் ஆகிவிடுவாய்." என்று ஆசை வார்த்தை காட்டியது.
மானுக்கும் அந்தப் பச்சைப் பயிரை உடனே சாப்பிட்டு விடவேண்டுமென்ற ஆசை வந்தது.
நரியுடன் அந்த தோட்டத்துக்குச் சென்று அந்தப்பயிரைத் தின்று பார்த்தது.
இதுவரை காட்டில் தின்ற புல்லை விட சுவையாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தினமும் அந்தத் தோட்டத்திற்குச் சென்று பயிரைச் சாப்பிட்டு வந்தது.
இப்படியே நான்கைந்து நாட்கள் கடந்திருக்கும்.
தோட்டத்தின் சொந்தக்காரன் நம்முடைய பயிரை ஏதோ ஒரு மிருகம் சாப்பிட்டுச் சென்று விடுகிறதே என்று ஒருநாள் மறைந்திருந்து பார்த்தான்.
மான் அன்றும் தோட்டத்திற்கு வந்து பயிரைத் தின்றது.
"ஒரு மான் தினமும் இப்படி வந்து மேய்ந்து விட்டுப் போகிறதா? இந்த மானை வலை விரித்துப் பிடித்து விடவேண்டும். இல்லையேல், மான் நம் தோட்டத்தை அழித்து விடும். " என்று அந்த மானைப் பிடிப்பதற்காக மறுநாள் வலையைக் கட்டி வைத்தான்.
அடுத்தநாள் வந்த மான் தோட்டக்காரன் விரித்து வைத்த வலையில் மாட்டிக் கொண்டது.
உடனே அதற்கு நண்பன் நரியின் ஞாபகம் வந்தது. " இந்நேரம் நம் நண்பன் நரி வந்தால் எப்படியும் நம்மைக் காப்பாற்றி விடுவான். " என்றபடி வழியைப் பார்த்துக் கொண்டிருந்தது.
மான் நினைத்தது போலவே நரியும் வந்தது.
அப்பாடா நம்மை நம் நண்பன் நரி காப்பாற்றி விடுவான் என்று எண்ணி உதவிக்கு அழைத்தது.
நரிக்கு நாம் நினைத்தது போல் அந்த மானின் மாமிசம் கிடைக்கப் போகிறது. இன்று நமக்கு நல்ல நாள் என்று நினைத்தபடி மானுக்கருகில் சென்றது.
"நண்பா, நான் இன்று விரதத்தில் இருப்பதால் இந்த தோலினால் ஆன வலையைத் தொட மாட்டேன் இந்த தோல் வலையைக் கடித்து இதுவரை நான் கடைப்பிடித்து வந்த விரதம் பாழாகி விடக்கூடாது. இன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நாளை உறுதியாகக் காப்பாற்றி விடுவேன்." என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.
நரி அருகிலிருந்த புதருக்குள் போய் ஒளிந்து கொண்டது.
பகல் போய் இரவு வந்தது.
மரத்தடிக்கு மான் வராததைக் கண்டு அதன் நண்பனான காகத்துக்கு இரவு முழுக்க உறக்கமே வரவில்லை.
விடிந்ததும் காகம் அந்தப் பகுதி முழுவதும் பறந்து தேடத் துவங்கியது.
அப்போது தோட்டத்தில் வலையில் சிக்கிக் கிடந்த மானைப் பார்த்தது.
வலையில் சிக்கியிருந்த மானின் அருகில் சென்ற காகம், "நண்பனே, உனக்கு இந்தத் துன்பம் எப்படி வந்தது?" என்று கேட்டது.
" நண்பா, உன் பேச்சைக் கேட்காமல் வந்த பலன்..." என்று சொல்லி அழுதது அந்த மான்.
" உன் புதிய நண்பன் நரி எங்கே போய் விட்டது? " என்று கேட்டது காகம்.
"நான் இப்படி வலையில் சிக்கி உதவி கேட்டபோது அவன் விரதமிருப்பதாகப் பொய் சொல்லி இங்கிருந்து போய்விட்டான். அவன் என் இறைச்சியைத் தின்பதற்காக இந்தப் பக்கம்தான் எங்காவது ஒளிந்து கொண்டிருப்பான்." என்றபடி மான் அழுதது.
காகம் வருத்தத்துடன் மானைப் பார்த்தது.
அப்போது தோட்டக்காரன் கையில் தடியுடன் வந்து கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த காகம், " தோட்டக்காரன் வருகிறான் நான் சொல்வது போல் செய்" என்றது பரபரப்புடன்.
"சீக்கிரம் சொல் நீதான் இந்த அபாயத்திலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்." என்று உயிர் பிழைக்கும் ஆர்வத்தில் கேட்டது.
"கவனமாகக் கேள், நீ இப்போது மூச்சை அடக்கிக் கொண்டு செத்தவன் போலக் கிடந்தால் அவன் உன்னைப் பார்த்து நீ செத்து விட்டாய் என்று நினைத்துக் கொண்டு கட்டிய வலையை அவிழ்த்துச் சுருட்டி வேறு ஒரு இடத்தில் வைக்கப் போவான். அப்போது நான் கத்துகிறேன். அதைக் கேட்ட உடனே நீ விரைவாக ஓட்டம் பிடித்து ஓடிவிடு..."
" சரி ... சரி "
மானும் செத்ததுபோல் கிடந்தது. காகமும் அதன் கண்ணைக் கொத்துவது போல் பாவனை செய்தது.
தோட்டக்காரனும் வந்தான். மானைப் பார்த்தான். "ஓ ! மான் செத்துவிட்டதா?" என்று முணுமுணுத்தபடி கட்டியிருந்த வலையை அவிழ்த்து ஓரிடத்தில் வைக்கப் போனான்.
காகமும் " கா...கா..." என்று கத்தியது.
காகத்தின் குரல் கேட்ட மானும் தப்பித்தோம் என்று ஓட்டம் பிடித்தது.
ஏமாற்றமடைந்த தோட்டக்காரன், கையில் வைத்திருந்த தடியை மானை நோக்கி வீசி எறிந்தான்.
அந்த தடி மானின் மீது படாமல் புதரில் ஒளிந்திருந்த நரியின் மேல் பட்டு அது "அய்யோ, செத்தேன்" என்று சப்தமிட்டவாறு உயிரை விட்டது.
புகழ்ச்சியாகவும், இனிப்பாகவும் பேசுகிறார்களே என்று நம்பி ஏமாறும் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
புதியவர்களின் புகழ்ச்சிப் பேச்சால் மகிழ்ச்சி வராலாம். பின்னால் பெருந்துன்பம் வரத் தயாராய் இருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறந்து விடக்கூடாது.