ஒருமுறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர் பீர்பாலுக்கும் ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது; மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்” என்று பீர்பால் கூறினார்.
அக்பருக்கு கடுமையான கோபம். “அதெப்படி இவ்வாறு பொதுமைப்படுத்தி இப்படிக் கூறலாம்? நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்குப் பயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
அவர்கள் இருவருக்குமிடையிலான வாக்குவாதம் அதிகமானது.
இந்நகரில் மனைவிக்குப் பயப்படாத கணவனைக் காட்டுவதாகச் சொல்லி தன் வாதத்தில் வெற்றி பெறும் நோக்கத்துடன் அக்பர் பீர்பாலைத் தம்முடன் அழைத்தார்.
பீர்பாலும் அதற்குச் சம்மதித்தார்.
நகரில் திருமணமாகி வசிக்கும் ஆண்கள் அனைவரும் நகரின் நடுவிலிருந்த பெரிய மைதானம் ஒன்றில் கூடுமாறு அறிவிக்கச் செய்தார்.
திருமணமான ஆண்கள் அனைவரும் அரசரின் உத்தரவை மீற முடியாமல் அந்த மைதானத்தில் கூடினர்.
அங்கு பீர்பால் ஓர் அறிவிப்புச் செய்தார்.
“இந்தக் கூட்டத்தில் தம்முடைய மனைவிக்குப் பயப்படுகிறவர்கள், மனைவியின் பேச்சைக் கேட்கிறவர்கள் அனைவரும் வலது பக்கம் செல்லுங்கள்”
முதலில் சிறு கூட்டம் வலது பக்கம் நகர்ந்தது. அப்படியே சிறிது சிறிதாக அதிகரித்து அனைவருமே வலதுபக்கம் சென்று விட்டனர்.
அப்போது வலதுபக்கத்திலிருந்து ஒருவன் மட்டும் தயங்கியபடி இடப்பக்கம் சென்று ஒதுங்கி நின்று கொண்டான்.
இதைப்பார்த்த அக்பருக்கு மகிழ்ச்சி. அவர் பீர்பாலை நோக்கி, “அதோ ஒரு உண்மையான ஆண் மகன்!” என்றார்.
“பொறுங்கள் மன்னா, அவனை அழைத்து விசாரிப்போம்” என்ற பீர்பால் அவனை அருகில் வரச்சொன்னார்.
நடுங்கிக்கொண்டே வந்தான் அவனிடம், “ஏனப்பா? நீ முதலில் வலதுபக்கமிருக்கும் மனைவியின் சொல்படி கேட்கும் கூட்டத்திற்குச் சென்றாய். கடைசியில் நீ மட்டும் அதிலிருந்து பிரிந்து வந்து விட்டாயே? ஏன்?” என்று கேட்டார்.
அவன், “நான் வீட்டை விட்டு வரும்போது, ‘பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேரவேண்டாம் என்று என் மனைவி எச்சரித்து அனுப்பிவைத்தாள். ஆகவேதான் நான் அந்தக் கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன்” என்றான்.
அக்பருக்கு பீர்பால் சொன்னதன் பொருள் புரிந்தது.