தெய்வ சன்னதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை வேண்டுதலாகச் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
பச்சரிசி மாவு, வெல்லச் சர்க்கரை, ஏலக்காய் போன்றவைகளை ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, அந்த மாவின் நடுப்பகுதியில் குழி போல் செய்து, அதில் நெய் விட்டுத் திரி போட்டுத் தீபம் ஏற்றித் தெய்வ சன்னதியில், குறிப்பாக அம்மன் சன்னிதியில் வைத்து, வேண்டி வழிபாடு செய்வதை மாவிளக்கு போடுதல் என்கின்றனர்.
நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பைத் தீபமாகவும் அர்ப்பணிக்கும் சிறந்த வழிபாடு இது. மேலும் பஞ்ச கோசங்களை இவ்வழிபாடு நினைவுபடுத்தும்.
உலகில் உள்ள உயிர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அன்னம் (அரிசி) நிலத்தையும், இனிமை அல்லது ஆனந்தமாகக் கருதப் பெறும் வெல்லத்தையும் (ஆகாயம்) சேர்த்து நெய் (நீர்) யில் வாசம் செய்யும் அக்கினி பகவானை வாயுவின் துணை கொண்டு எரியச் செய்து ஐம்பூதங்களையும் நினைவுறவும், ஐம்பூதங்களோடு இயைந்த வாழ்வு வாழ வேண்டும் என்பதையும், நம் உடம்பில் ஐம்பூதங்களின் செயல்பாடும் உண்டு அவற்றில் ஒன்று போனாலும் நாம் உடலம் சடலம் ஆகும் என்பதை உணர்ந்து உடலையும் உயிரையும் பேணுவதாக மாவிளக்கு ஏற்றப் பெறுகிறது.
தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் பிரசன்னமாகி அருள்புரிகின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப் பெறுகிற தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் வெளிப்பட்டு அருள்புரிகின்றனர்.
* திருமணம், புதுமனை செல்தல், வளைகாப்பு போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர், குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்து கொள்வதால், நிகழ்ச்சிகளில் எவ்விதத் தடங்கலுமின்றி நடக்கும்.
* வருடத்துக்கு ஒரு முறையாவது தனது வீட்டில் நல்ல நாள் பார்த்து உரல், உலக்கை கொண்டு, வீட்டிலேயேப் பச்சரிசி மாவை இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அம்பாள் சன்னிதியிலோ அல்லது குலதெய்வச் சன்னிதியிலோ மாவிளக்குத் தீபம் ஏற்றுவது குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.
* அரிசி, வெல்லம், நெய் துணை கொண்டு எரியும் சுடர் விடும் புகை துர்சக்திகள், எதிர்மறை அலைகள், நுண்கிருமிகள் அனைத்தையும் அகற்றும் வல்லமை பெற்றது.