ஒரு முறை முல்லா தன் வறுமையைக் கூறி மன்னரிடம் ஏதாவது பரிசு பெற்று வரலாம் என்று அரச சபைக்குச் சென்றார்.
மன்னர் முல்லாவைப் பார்த்து , " நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்குச் சரியான பதில் தந்தால்தான் பரிசு" என்றார்.
அதற்கு முல்லாவும் சம்மதித்தார்.
முன்னர் தன் முதல் கேள்வியைக் கேட்டார்.
"என் உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை? "
முல்லா, " என்னைப் போன்ற ஏழைகளுக்குப் பரிசளித்துப் பரிசளித்து உங்கள் உள்ளங்கைகளில் முடியில்லை " என்றார்
உடனே மன்னர், " உன் உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.
"உம்மைப் போன்ற வள்ளல்களிடமிருந்து பரிசுகளாகப் பெறுவதால் என் உள்ளங் கைகளில் முடியில்லை" என்றார்.
திருப்தியடைந்த மன்னர் கடைசியில்,
"இந்த அவையிலிருப்பவர்கள் உள்ளங் கைகளில் முடியில்லையே ஏன்? " என்று கிடுக்கிப்பிடி போட்டார்.
முல்லாவும் விடுவதாக இல்லை. "உம் வள்ளல் தன்மையைப் பாராட்ட கைகளைத் தட்டியே மகிழ்ந்து கொண்டிருப்பதால் இவர்கள் உள்ளங் கைகளிலும் முடியில்லை." என்றார் சாதுரியமாக.
முல்லாவின் அறிவுத் தன்மையை வியந்த மன்னர் ஏராளமான பரிசுகளை வழங்கினார்.