ஒரு முறை சிவபெருமானுக்கும் தேவ்க்காய்க்குமிடையே கடும் வாக்குவாதம் தொடங்கியது.
“நான் தேவர்களையே காய்(கோபி)ப்பவன் அதனால்தான் எனக்குத் தேங்காய் என்று பெயர் வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்றது தேங்காய்.
தேங்காயின் ஆணவத்தை அறிந்த சிவபெருமான், “அப்படியா? உன்னைக் காட்டிலும் நான் கெட்டியான ஆமை ஓடு அணிந்திருக்கிறேனே” என்றார்.
அதனைக் கேட்ட தேங்காய், “நானும் கூடத்தான் மேலே கெட்டியான ஓடு வைத்திருக்கிறேன். தேங்காய் ஓடு என்பார்களே நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்றது.
உடனே சிவபெருமான், “நான் யானை, புலி போன்றவற்றைத் தோலுரித்திருக்கிறேனே” என்றார்.
தேங்காய், “நான் கூடத்தான் மட்டையை உரித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்” என்று பதில் சொன்னது.
சிவபெருமான் பொறுமையாக, “சரி…சரி..நான் வெண்ணீறு பூசி, வெள்ளை வெளேரென்று விளங்குகிறேனே” என்றார்.
தேங்காய் மேலும் ஆணவத்தோடு, “எனக்கு அந்தக் கட்டாயமெல்லாம் இல்லை. இயற்கையாகவே நான் வெள்ளையாகத்தான் இருக்கிறேன்” என்றது.
சிவபெருமான், “நான் கங்கையை என் தலைமுடியில் தாங்குகிறேன்” என்றார்.
தேங்காய், “நான் இளநீரை என்னுள்ளேயே வைத்துத் தாங்குகிறேன்” என்றது.
சிவபெருமான், “எனக்கு மூன்று கண்கள் இருக்கின்றன” என்றார்.
தேங்காயும் “அட… எனக்கும் கூடத்தான் மூன்று கண்கள் இருக்கின்றன” என்றது.
சிவபெருமான், “நான் மறைகளின் முடியி்ல் இருக்கிறேன்” என்றார்.
தேங்காய், “நான் மரங்களின் முடியில் இருக்கிறேன்” என்றது.
சிவபெருமான், “எனக்கு சடைக்குடுமி இருக்கிறதே” என்றார்.
“எனக்கும்தான் குடுமி இருக்கிறது” என்றது தேங்காய்.
ஆணவத்தின் உச்சியிலே ஒலித்த தேங்காயின் பதிலைக் கேட்ட சிவபெருமான் கோபமடைந்தார்.
அதன் பின்னர், “தேங்காயே… பணிவு என்பதே உன்னிடம் சிறிது கூட இல்லை. ஆணவம் கொண்ட நீ சிதறும்படியாக எல்லாரும் உன்னைக் கோவில் வாசல்களில் உடைக்கட்டும்” என்றார்.
அடக்கம் இல்லாமல் ஆணவமாக இருந்தால் நம் வாழ்க்கையும் சிதறு (தேங்)காயாகப் போய்விடும் என்பதை இந்தக்கதை உணர்த்துகிறது.