சாபங்கள் மொத்தம் பதின்மூன்று வகையான சாபங்கள் இருக்கின்றன என்கின்றனர். அவை;
1. பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருவது பெண் சாபம். இச்சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
2. பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, அவருடைய உடலைத் தாண்டுவது, அவ்வுடலுக்கான இறுதி நிகழ்வுகளைச் செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பது போன்றவைகளால் பிரேத சாபம் ஏற்படும். இச்சாபத்தால் ஆயுள் குறையும்.
3. பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக் கொடுத்த குருவை மறப்பது, வித்தையைத் தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது போன்றவைகளால் பிரம்ம சாபம் ஏற்படுகிறது. இச்சாபத்தால் வித்யா நஷ்டம் ஏற்படும், அதாவது, கல்வியறிவு இல்லாமல் போகும்.
4. சர்ப்ப சாபம்
பாம்புகளைத் தேவையின்றி கொல்வது, அவற்றின் இருப்பிடங்களை அழிப்பது போன்றவைகளால் சர்ப்ப சாபம் உண்டாகும். இச்சாபத்தால், கால - சர்ப்ப தோஷம் ஏற்பட்டுத் திருமணத் தடை ஏற்படும்.
5. பித்ரு சாபம்
முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களைச் செய்யாமல் மறப்பது, தாய்- தந்தை, தாத்தா-பாட்டி போன்றோரை ஒதுக்கி வைப்பது, அவமதிப்பது போன்றவைகளால் பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
6. கோ சாபம்
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7. பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
8. கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நீரைப் பாழ் செய்வது, ஓடும் நதியை அசுத்தம் செய்வது போன்றவைகளால் கங்கா சாபம் வரும். இச்சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
9. விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வது, மரத்தை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனையாக்குவது, விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10. தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்து விடுவர்.
11. ரிஷி சாபம்
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால் வம்சம் அழியும்.
12. முனி சாபம்
எல்லை தெய்வங்கள் மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு ஏற்படும்.
13. குலதெய்வ சாபம்
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒரு வித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.