சிவனடியார்களாக 63 நாயன்மார்கள் விளங்க, சிவனை வணங்கியவுடன் சண்டிகேசுவரரை மட்டும் வணங்குவது ஏன்? அவருக்கு மட்டும் இந்த முக்கியத்துவம் அளிக்கக் காரணம் என்ன? பக்தர்கள் விளையாட்டாக காது கேட்காத சாமி என்று கைகளைத் தட்டியும், விரல்களைச் சொடுக்கியும் உறங்குபவரை எழுப்பி வணங்குவதாகக் கூறுகின்றனர். உண்மையில் சண்டிகேசுவரரின் பரிசுத்தமான அன்பினைக் கண்டு ஆனந்தமடைந்த சிவபெருமான் திருத்தொண்டர்களின் தலைவனாக அவரை நியமித்த வரலாறை அறிவது அவசியம்.
சோழநாட்டு தலைநகரங்களுள் ஒன்றான திருச்சேய்ஞலூர் செல்வச் செழிப்பும், இயற்கை வளமும் நிறைந்த ஊர். இவ்வூரில் மாணிக்கமும், விடத்தையும் ஒருங்கே கொண்ட பாம்பினையொத்த எச்சதத்தன், பவித்திரை தம்பதியின் புதல்வனாக உருவெடுத்தவர் சண்டிகேசுவரர். இவருடைய இயற்பெயர் விசாரசருமர். பாலகப் பருவமான ஐந்து வயதிலேயே நான்கு வேதங்களையும், இருபத்தெட்டு ஆகமங்களையும் ஞானத்தின் பயனாய் உணரும் தன்மையுடையவரானார். கல்வியின் எல்லையாக விளங்குவது திருவம்பலத்தில் ஆடும் திருக்கழலே என்று சிந்தையில் தெளிந்தவரானார்.
ஒரு நாள் ஒரு இளங்கன்றினை ஈன்ற பசு ஒன்று மேய்ப்பவனான ஆயனை நோக்கி முட்ட வந்தது. அவன் சிறிதும் இரக்கமின்றி கோலால் அடிக்க, பசுவின் மெய்த்தன்மை உணர்ந்த விசாரசருமர் அதனைப் பாதுகாத்தார். உயிர்கள் யாவற்றிலும் மேலான பசுக்கள் புனிதத் தீர்த்தங்களைத் தம்மிடத்தே கொண்டுள்ளன. இப்பசுக்களின் உடலில் தேவர்களும்,முனிவர்களும் அங்கமாகத் திகழ்கின்றனர். சிவனுக்குத் திருமஞ்சனமாக விளங்கும் பஞ்சகவ்வியத்தை வழங்கும் பசுக்கள் போற்றி பாதுகாக்கத்தக்கது என்பதால் அந்தணர்களின் இசைவு பெற்று அன்று முதல் ஆநிரைகளைத் தாமே மேய்க்கலானார்.
மார்பில் முப்புரிநூல் அணிந்த விசாரசருமர் கோலும்,கயிறும் கொண்டு பசுக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தினார். புல் அதிகமாக உள்ள காலங்களில் பசுக்களை மேய்த்து உண்ணச் செய்தும், சில நிலைகளில் கையால் பறித்து உண்பதற்குக் கொடுத்தும், இதமான நீர் நிலைகளில் நீரருந்தச் செய்தும், அச்சத்தைப் போக்கி பசுக்களை ஓட்டி பின் சென்றும், நிழலில் தங்கச் செய்தும், பால் கறக்க உதவியும் நன்றாக மேய்த்தார். பசுக்களின் பொலிவினாலும், அதிகமாக பால் சுரப்பதையும் அறிந்த வேதியர்கள் விசாரசருமரின் மேய்ச்சல் தொழிலை எண்ணி மகிழ்ந்தனர்.
தம்மிடம் சார்ந்த பசுக்கள் தாமே பால் பொழிவதைக் கண்ட விசாரசருமர் சிவபிரானுக்குத் திருமஞ்சனம் செய்யும் குறிப்பினை உணர்ந்தவரானார். மண்ணியாற்றின் மணல் திட்டில் ஆத்தி மரத்தின் அடியில் சிவலிங்கத் திருமேனியை மணலால் செய்து சிவலாயமும், உயர்நத கோபுரமும்,சுற்றாலயமும் வகுத்தார். பூசைக்காக மலர்களைக் கொய்தபின் பசுக்களின் மடியைத் தீண்ட அவை வளமாகப் பாலைப் பொழிந்தன. விசாரசருமர் சிவலிங்கத்திற்கு பாலைக் கொண்டு திருமஞ்சன நீராட்ட, சிவனும் தன் அன்பரின் அன்பை ஏற்றுக் கொள்பவரானார். திருமஞ்சனத்திற்கு பால் சொரிந்த பசுக்கள் எக்குறைபாடுமின்றி அந்தணர்களின் மனைகளிலும் குறைவிலாது பால் சொரிந்தன.
இத்தகைய பூசை பலநாட்களாக தொடர்ந்து நடைபெற ஒருவன் இதனைக் கண்டு அந்தணர்களிடம் தெரிவித்தான். கோபமுற்ற அந்தணர்கள் தந்தை எச்சதத்தனை அழைத்து 'உன் மகன் பாலைக் கறந்து கீழே கொட்டுகிறான்' என்றுரைத்தனர். எச்சதத்தன் 'தவறினைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இனி இத்தகைய செயல் நிகழ்ந்தால் குற்றம் என்னுடையதே' என்று நவின்றான். மறுநாள் விசாரசருமர் பசுக்களை ஓட்டிச் சென்றவுடன் எச்சதத்தன் மறைவாக பின்தொடர்ந்து சென்று குராமரத்தின் மீதேறி ஒளிந்துக் கொண்டான். விசாரசருமர் நீராடி பூசைக்குரிய பொருட்களைச் சேகரித்து சிவாகம விதியின்படி மனம் ஒன்றிய நிலையில் மணலாலான சிவலிங்கத்திற்கு பாற்குடங்களை எடுத்து திருமஞ்சனமாட்டினார். இதனைக் கண்டு சினமுற்ற எச்சதத்தன் விசாரசருமரின் முதுகில் கைத்தண்டு கொண்டு அடித்தும், கொடிய சொற்களால் வசைமொழி கூறியும் துன்புறுத்தினான். நாயனார் சிவபிரான் மீது கொண்ட பேரன்பால் அருச்சனையைப் புரிதலைத் தவிர வேறு உணர்வின்றி விளங்கினார்.
எச்சதத்தன் பால்குடத்தைச் சாய்த்துக் கீழே கொட்டும் போது விசாரசருமர் அவ்வாறு செய்தவன் தம் தந்தை என்று அறிந்தும், இறைவனுக்குரிய பாலைச் சிந்தியதால் எதிரே இருந்த கோலை எடுக்க, அது மழுவாக மாறி கால்களைத் துணிக்க அவன் வீழ்ந்தான்.
' கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால்
வந்நு மழுஆ யிட எறிந்தார்
மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்'
பூசையின் இடையூற்றைப் போக்கிய நாயனார் மனம் ஒன்றி மீண்டும் அருச்சிக்க, அத்தருணத்தில் சிவபிரான், உமையோடு இடப வாகனத்தின் மீதிருந்து காட்சியளித்தார். நாயனார் சிவனை வணங்கி மனம் களிப்புற்ற பாதமலர்களில் பணிந்தார். சிவபிரான் நாயனாரை நோக்கி 'எம் பொருட்டு உன்னைப் பெற்ற தந்தை தரைப்பட்டு விழுமாறு எறிந்தாய். அடுத்த தந்தையாக இனி உனக்கு நாமே யாவோம்' என்றுரைத்தார்.
'தொண்டர் தமக்கு
அதிபன் ஆக்கி அனைத்தும் நாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம்'
நாயனாரைத் திருத்தொண்டர்களுக்கு அதிபராக்கிய சிவபிரான் 'நாம் உண்ட பரிகலமும், உடுக்கும் உடைகளும், தரிக்கும் மாலைகளும் மற்றும் அணிவகைகள் யாவும் உமக்கே உரியதாகும் வகையில் சண்டீசன் ஆகும் பதவியைத் தந்தோம்' என்றார். சிவபிரான் தம் முடி சூடிய கொன்றை மாலையை நாயனாருக்கு அணிவித்து சண்டீசப்பதவியில் அமர்த்தினார்.
சிவ அபராதம் செய்த தந்தையின் கால்களைத் துணித்த அந்தணச் சிறுவராகிய விசாரசருமர் அதே சரீரத்துடனே சிவபிரானின் திருக்குமாரராக ஆகினார். எச்சதத்தன் சண்டேசுவரப் பெருமானால் வெட்டுண்டதால் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினார்.
சண்டீசப்பதம் என்பது சிவனுக்கு நெருங்கிய நிலையில் உள்ளது. இவர் சிவனை வழிபடும் பக்தர்களுக்கு வழிபாட்டின் பயனை அளிப்பார். சிவபிரான்பால் இடையறாத தியானம் உடையராதலால் இடையில் குறுக்கிட்டச் செல்லலாகாது என்பது விதி. சண்டீசரின் மேன்மையை உணர்ந்து அவரை வணங்கி சிவபெருமானின் அருள் பெறுவோமாக!