அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
தேனி.எஸ். மாரியப்பன்
ஒருத்தி: கரகாட்டக்காரியை மருமகளாக் கொண்டு வந்தது தப்பாப் போச்சு...!
மற்றவள்: ஏன்...?
ஒருத்தி: ஏதாவது சொன்னா புருஷனைத் தலையில தூக்கி வச்சு ஆடுறா.
*****
ஒருத்தி: காதல் பாதை கரடு முரடானதுங்கறதை நான் நம்பலைடி...
மற்றவள்: ஏன்...?
ஒருத்தி: என்னோட காதலர் என்னை நல்ல பாதையிலே கூப்பிட்டுட்டு வந்திட்டார்.
*****
ஒருத்தி: என் கணவர் ஆபிஸ் போனதும் எனக்கு போன் பண்ணிச் சொல்லிடுவார்.
மற்றவள்: பத்திரமா வந்து சேர்ந்திட்டேன்...னா...?
ஒருத்தி: இல்ல...வேற எங்கேயும் போகலைன்னு...
*****
ஒருத்தி: என் கணவர் என்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தக்காலில் நின்னார்.
மற்றவள்: ஏன்...?
ஒருத்தி: அவருக்குத்தான் ஒரு கால் இல்லையே...
*****
ஒருத்தி: முதலிரவில் என் கணவர் ஒரே வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.
மற்றவள்: என்ன வார்த்தை...?
ஒருத்தி: "சரி...சரி" ங்கிற வார்த்தையைத்தான்.
*****
ஒருத்தி: என் கணவர் ஜெயிலில் இருந்து திரும்பி வந்ததிலிருந்து ஜன்னலைத் திறந்து வைக்க முடியலடி...
மற்றவள்: ஏன்...?
ஒருத்தி: ஜன்னல் கம்பிகளைப் பிடித்து எண்ண ஆரம்பிச்சிடுறாரே..!
*****
ஒருத்தி: ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல...
மற்றவள்: ஆமாம்...அதுக்கென்ன...?
ஒருத்தி: நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!
*****
ஒருத்தி: முன்னால என்னோட கணவர் ஆபிசில இருந்து பேனா, பென்சில், பேப்பர்னு கொண்டு வந்துக்கிட்டிருந்தார்...
மற்றவள்: இப்போ...?
ஒருத்தி: ஒரு டைப்பிஸ்ட் பொண்ணைக் கொண்டு வந்திருக்கிறார்.
*****
ஒருத்தி: என்னோட கணவரை ஹோட்டலுக்குச் சாப்பிடக் கூப்பிட்டுப் போனது தப்பாப் போச்சு
மற்றவள்: ஏன்...?
ஒருத்தி: ஒவ்வொண்ணையும் எப்படி செய்றதுன்னு சரக்கு மாஸ்டரைக் கூப்பிட்டு என் மானத்தை வாங்கிட்டார்.
*****
ஒருத்தி: அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி
மற்றவள்: எப்படிச் சொல்ற...?
ஒருத்தி: அமாவாசை அன்னிக்குத் தேன்நிலவுக்குப் போகலாமான்னு கேட்கிறார்."
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.