பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
ஒரு அரசன் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தான்.
அந்தப் போட்டி இதுதான்.
“ஒரு ஆடு மக்களுக்குத் தரப்படும். அந்த ஆட்டை அடுத்த மாதம் சற்றும் மாறாமல் அதே எடையுடன் திருப்பித் தர வேண்டும். எடை கூடினாலோ, குறைந்தாலோ மரண தண்டனை விதிக்கப்படும். அதே எடையுடன் தந்தால் ஒரு தலைமுறைக்குத் தேவையான தங்கம் தரப்படும்”
இந்தக் கடுமையான தேர்வில் கலந்து கொண்டு தங்கள் உயிரை இழக்க யாரும் தயாராக இல்லை.
இந்நிலையில், ஒரு முனிவர் அரசனிடம் வந்தார். அரசனின் நிபந்தனையை ஏற்று ஒரு ஆட்டைத் தனது ஆசிரமத்துக்கு ஓட்டிச் சென்றார்.
அடுத்த மாதம் அவர் ஆட்டுக்குட்டியுடன் அரண்மனைக்குத் திரும்பினார். ஆட்டுக்குட்டி எடை போடப்பட்டது. அந்த ஆட்டுக்குட்டியின் எடை அப்படியே இருந்தது.
அரசனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “இந்த அதிசயம் எப்படி நடந்தது?” என்று முனிவரிடம் கேட்டான்.
அதற்கு முனிவர், “இது மிகச் சாதாரணமானது. நீ தந்த ஆட்டுக்குட்டியை ஒரு கூண்டில் அடைத்தேன். கூண்டின் மறுபகுதியில் ஒரு புலியை அடைத்து வைத்தேன். ஆட்டிற்கு வழக்கம் போல் உணவிட்டேன். உணவைச் சாப்பிட்ட ஆடு, புலியைப் பார்த்துப் பார்த்து, ‘இது நம்மைக் கொன்று விடுமோ’ என்ற பயத்திலேயே இருந்தது. அதனால் ஆட்டின் எடையில் மாற்றமில்லை. பயமிருப்பவன் வாழ்வில் முன்னேறுவதில்லை. புரிகிறதா?” என்றார்.
அரசனுக்குப் புரிந்தது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.