ஒரு நாள் கன்பூசியஸ், தன்னுடைய மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து சில அறிவுரைகளைக் கேட்டான்.
“ஐயா, என்னை அரசு அதிகாரியாக நியமனம் செய்ய இருக்கிறார்கள்? எனக்கு உங்களுடைய அறிவுரை வேண்டும்?” என்றான்.
உடனே அவர், “எந்தச் செயலைச் செய்தாலும், அதில் உடனடியாகப் பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே. குறுகிய காலத்தில் லாபம் கிடைக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. அற்ப லாபங்களையும் எதிர்பார்க்கக் கூடாது. எதிலும் அவசரம் காட்டாதே. நீ முதலாவதாகச் செய்யும் தவறு, உன் மேலான மதிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க வைக்கும். இரண்டாவதும் தவறு செய்தால், அது உன்னுடைய பெரிய சாதனைகளைக் கூட சரியச் செய்துவிடலாம்’ என்றார்.
“சரிங்க ஐயா... அரசு அதிகாரி என்ற முறையில் என்னிடம் எந்தக் குறைகள் இருக்கக் கூடாது?” என்று மீண்டும் அந்த மாணவன் கேட்டான்.
“உன்னுடைய முடிவுகளில் சுயநலம் அறவே கூடாது. பிடிவாதம் இருக்கக் கூடாது. பாரபட்சமும் காட்டக் கூடாது. அவசரப்பட்டு முடிவெடுப்பது என்பது கூடவேக் கூடாது” என்றார் கன்பூசியஸ்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மன்னன் மகன் ஒருவன் எழுந்தான். “முன்னோர்களின் ஆவிகளுக்கு, நாம் எப்படிக் கடமைகளைச் செய்வது?” என்று கேட்டான்.
“முதலில் உயிருடன் இருப்பவர்களுக்கு உன் கடமைகளைச் செய். ஆவிகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார் கன்பூசியஸ்.
மீண்டும் அந்த இளவரசனிடமிருந்து கேள்வி வந்தது. “ஒருவரது ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், எவையெல்லாம் தேவை?”
“ஆட்சி சிறப்பாக அமைய மூன்று விஷயங்கள் முக்கியம். முதல் தேவை... போதிய உணவு இருப்பு. இரண்டாவது மக்களின் பாதுகாப்புக்குப் பலமான ராணுவம். மூன்றாவது, மக்களின் நம்பிக்கையை அரசு பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றிருப்பதே சிறப்பான நிர்வாகம்” என்றார் கன்பூசியஸ்.
இளவரசனிடம் இருந்து மீண்டும் கேள்வி... “இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால், முதலில் விட வேண்டியது எது?”
“ராணுவம்”
“இரண்டாவதாக ஒன்றை விட வேண்டும் என்றால்...?”
“உணவு இருப்பு”
மாணவர்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.
அவர்களின் ஆச்சரியத்தைக் கண்டவர் அதற்கான விளக்கத்தையும் அளிக்க முன்வந்தார்.
“மாணவர்களே! உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிய நேரிடும். மனிதச் சமுதாயத்திற்கு இதுபோன்ற நிலை பலமுறை வந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் மனிதச் சமுதாயம் அதில் இருந்து மீண்டெழுந்திருக்கிறது. ஆனால், ஒரு அரசின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், அந்த நாட்டின் நிலை அதோகதியாகிவிடும்” என்றார் கன்பூசியஸ்.
மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.