துறவி ஒருவர் தன் சீடனை அழைத்து ஒரு நாள் முழுவதும் அரண்மனையில் தங்கி பாடம் கற்று வருமாறு கூறினார்.
ஆசிரமத்தில் படிக்காத பாடமா அரண்மனையில் படிக்க என்று எண்ணினாலும் குருவின் கட்டளைப்படி அவன் அன்று அரண்மனை சென்றான்.
அரசன் அவனை நன்கு உபசரித்து அன்று அங்கு தங்கிச்செல்லுமாறு கூறி அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தான்.
ஆனால் சீடன் பார்க்கையில் எங்கு பார்த்தாலும் ஆட்டமும்,பாடலும்,குடியுமாக இருந்தது அவனுக்கு அருவருப்பாக இருந்தது. இருந்தாலும் மனத்தைக் கட்டுப்படுத்திப் படுத்து உறங்கினான்.
அதிகாலையில் அரசன் சீடனை அழைத்து அரண்மனையின் பின்புறம் செல்லும் நதியில் குளித்து வர அழைத்தார்.
சீடனும் அரசனும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அரண்மனையில் தீப்பற்றியது.
அதை அரசன் சீடனிடம் காண்பித்தான்.
உடனே சீடன் அவசரமாகக் குளிப்பதை விட்டு, தன் கோவணம் எரிந்து விடாமல் காக்க வேண்டி ஓடினான்.
கோவணத்தைக் கையில் எடுத்தபின் திரும்பிப் பார்த்தால் அரசன் இன்னும் ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்தான்.
அரண்மனை பற்றி எரியும்போது, அரசன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது தான் மட்டும் கோவணத்திற்காக ஓடி வந்ததை எண்ணி தலை கவிழ்ந்தான்.
அரசனின் காலில் விழுந்து எப்படி அவரால் பதட்டப்படாமல் இருக்க முடிந்தது என்று கேட்டான்.
அரசன் சொன்னார், “இந்த அரண்மனை என்னுடையது என்று நினைத்திருந்தால் நான் இங்கே நின்றிருக்க மாட்டேன். இது ஒரு அரண்மனை. நான், நான்தான். அரண்மனை எப்படி என்னுடையதாகும்?நான் பிறக்காத போதும் இந்த அரண்மனை இங்கு இருந்தது. நான் இறந்த பின்னும் அது இங்கு இருக்கும். இது எப்படி என்னுடையதாகும்? கோவணம் உங்களுடையது என்றும், அரண்மனை என்னுடையது என்றும் கருதியதால் நீங்கள் அதைப் பின்பற்றி ஓடினீர்கள். நான் அவ்வாறு கருதாததால் ஓடவில்லை”
சீடன் அரசனிடமிருந்து புதிய பாடத்தைக் கற்றிருந்தான்.