ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா?
பிரிவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம். ஒரு மாதம் தென்கலை நாமம். உடனே ஸ்ரீ ரங்கத்திலிருக்கிற வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போடுகிறார்கள். பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு மாதம் கெட்டிமேளத்தோடு வந்து யானைக்குத் தென்கலை நாமம் போடுகிறார்கள்.
முடிவு என்னவாயிற்று தெரியுமா?
மூன்றே மாதங்களில் யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
மறுநாள் பத்திரிகைச் செய்தி! ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று. அதற்கு அடுத்த நாள் அதே பத்திரிகைகளில் வேறு ஒரு புதிய செய்தி வருகிறது.
ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடிக்கவில்லை! அப்படி தவறுதலாகப் பிரசுரித்து விட்டோம். யானைக்கு மதம் பிடிக்காமல்தான் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியது.
-நீதியரசர் எம். கற்பகவிநாயகம் எழுதிய “வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள்” நூல்.
தொகுப்பு: சித்ரா பலவேசம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.