ராமன் வனவாசத்தின் போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றார். ராமனை வரவேற்ற முனிவர் தன் ஆசிரமத்தில் உணவருந்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு இராமன், தான் திரும்பும் போது அவசியம் உணவு உண்பதாகக் கூறிச் சென்றார்.
இராவண வதம் முடிந்ததும், இராமன் திரும்பி வரும் வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமம் சென்றார்.
விருந்து தயாரானது.
ஆனால் அப்போதுதான் இராமனுக்கு பரதனின் நினைவு வந்தது.
உடனே அனுமனை அழைத்து, “நீ உடனே அயோத்தி சென்று, தம்பி பரதனிடம் நான் வந்து கொண்டிருப்பதாகச் சொல். நான் இன்று திரும்பாவிடில் அவன் அக்கினிப் பிரவேசம் செய்து விடுவான்” என்றார்.
அனுமன் அயோத்தி சென்றான். அங்கு பரதன் அக்கினிப் பிரவேசம் செய்வதற்காகத் தீயை மூட்டிக் கொண்டிருந்தான்.
இதைக் கண்டு பதறிப் போயிருந்த கோசலையிடம் அனுமன், “இராமன், பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் விருந்து உண்டுவிட்டு வது விடுவார். தம்பி பரதனின் அக்கினிப் பிரவேசத்தை நிறுத்தச் சொல்லி என்னை அனுப்பினார்” என்றார்.
இதைக் கேட்ட கோசலை, “இப்படி காலமறியாமல் இராமன் விருந்து சாப்பிடுகிறானே... சரியான சாப்பாட்டு இராமன்” என்று கடிந்து கொண்டார்.
ஆனால், இராமன் உண்மையில் அதுவரை சாப்பிடவில்லை. அவருக்கு, தம்பி பரதன் அவசரப்பட்டு அக்கினிப் பிரவேசம் எதுவும் செய்து விடக் கூடாது என்கிற கவலையே மேலோங்கி இருந்தது.
ஒன்றுமே சாப்பிடாத இராமனுக்குத்தான் சாப்பாட்டு இராமன் என்று பெயர்.