ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் தோற்றங்களுக்குள் அழகுப் போட்டி வைத்தாராம்.
1. மத்ஸ்ய
2. கூர்ம
3. வராஹா
4. நரசிம்ம
5. வாமன
6. பரசுராம
7. ஸ்ரீராமன்
8. பலராமன்
9. கிருஷ்ணன்
10. கல்கி
என்று திருமாலின் பத்து தோற்றங்களும் போட்டியில் பங்கேற்றன.
முதல் சுற்று, மத்ஸ்ய, கூர்ம, வராஹ எனும் மூன்று தோற்றங்களும் முறையே, மீன், ஆமை, பன்றி என்று மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி நிராகரித்து விட்டார்.
நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால் அவர் நிராகரிக்கப்படவில்லை.
நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.
இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.
“மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய காலால் மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அது போலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. எனவே உங்களை நிராகரிக்கிறேன்!” என்றார் திருமழிசைப் பிரான்.
பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.
பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இப்போட்டியில் பங்கேற்கக் கூடாது. யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.
தம்பிக்காக பலராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
கல்கி பகவான் இன்னும் தோற்றமே எடுக்காததால், “நீங்கள் தோற்றம் பெற்ற பின்பே அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார்.
இறுதியாக, நரசிம்மன், ராமன், கண்ணன் மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.
மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான், “நரசிம்மர் தான் அழகு!” என்று தீர்ப்பளித்தார்.
“ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை. கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும் ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள். பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். எனவே அவர் தான் அழகு!” என்று கூறினார்.
பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம். ஏனெனில் நமக்குத் துன்பங்கள் நேரும்போது அவன் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கிறோம்.
துயரறு சுடரடி’யான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன, எனவே அவை தான் மிகவும் அழகு. அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர் தான் தோற்றங்களுக்குள் அழகானவர்.
இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
“அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து”
என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.
அதனால்தான் அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்கள் ஏற்படவில்லை. ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு ‘ஸ்ரீமான்’ என்ற திருப்பெயரும் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.
மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? என்பதிலும் காரணமில்லாமலில்லை.
ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.
மடியில் அமர்ந்தால்தான் காண முடியும் என்று ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.