தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
நிறைய தலைகள் கொண்ட பாம்பு ஒன்றும், ஒரே தலையும் நிறைய வால்களும் கொண்ட பாம்பு ஒன்றும் இருந்தன.
குளிர்காலம் வந்து விட்டால் போதும்! இந்தப் பாம்புகள் குளிருக்கு இதமாக ஏதாவது புற்றைத் தேடிச் செல்லும்.
பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நுழைய நினைக்கும் போதே, இன்னொரு தலை இன்னொரு புற்றைப் பார்க்கும். இன்னொரு தலை உடலை இழுக்கும். அது கடைசி வரை எந்தப் புற்றுக்குள்ளும் நுழையாமல் தவித்துக் கொண்டிருக்கும்.
ஆனால் பல வால்கள் கொண்ட பாம்போ ஒரு புற்றுக்குள் நுழையும். அதனுடைய பல வால்களும் வேகமாக உள்ளே போகும்.
இந்தக் கதை சாதாரணமானதாகத் தோன்றினாலும், இதில் அடங்கியிருக்கும் கருத்து மிக முக்கியமானது.
எந்த ஒரு அமைப்புக்கும் தலைமை ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் முடிவை உடனடியாக எடுக்க முடிவதுடன் அதை வெற்றியாகச் செயல்படுத்தவும் முடியும். பல தலைமைகள் இருந்தால் முடிவுகள் எடுப்பதில் ஒற்றுமையில்லாமல் எதையும் செயல்படுத்த முடியாமல் தவிக்க வேண்டியிருக்கும்.
- மங்கோலியா நாட்டுக் கதை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.