நான்கு கால்களைக் கொண்ட நாற்காலியை ஆங்கிலத்தில் ’chair' என்றும், பிரெஞ்சு மொழியில் 'chaise' என்றும், ஜெர்மன் மொழியில் 'stuhl' என்றும், ஆஸ்திரேலியன் மொழியில் ‘Sessel’ (easy chair) என்றும், இலத்தீன் மொழியில் ’Sella’ என்றும் சொல்லப்படுகிறது. பாவாணர் ஸ்டூலை 'மொட்டான்' என்கிறார். இலங்கை வழக்கில் மொட்டான் ‘புட்டுவம்’ என்றும், நாற்காலி ’கதிரை’ என்றும் வழங்கப் பெறுகிறது.
’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது தொல்காப்பியரின் கோட்பாடு. பாவாணரும் ஒவ்வொரு சொல்லுக்கும் காரணமாகத்தான் பெயர் வைத்திருக்கிறார் என்பதை அவருடைய ஆய்வுகளின் வழி அறிய முடிகிறது. சாய்வதற்கோ, கைகள் வைப்பதற்கோ எதுவும் இல்லாமல் மொட்டையாக இருப்பதை ஸ்டூல் என்கிறோம். அதுதான் ‘மொட்டான்’ என வழங்கப்பட்டிருக்கிறது.
முடி இல்லாத தலையை ’மொட்டை’ என்று சொல்லுவோம். நான்கு பக்கமும் சுவர், கூரை இல்லாமல் மொட்டையாக இருந்தால் அதற்கு ‘மொட்டை மாடி’ என்போம். எழுதியவர் பெயர், நாள், இடம், அனுப்புநர், பெறுநர் முகவரி எதுவுமே இல்லாமல் வரும் கடிதத்திற்கு ’மொட்டைக் கடிதாசி’ என்று சொல்வார்கள். இது புகாராகவோ, எச்சரிக்கையாகவோ அல்லது பயமுறுத்தும் நோக்குடனோ இருக்கலாம். கேப்பைக் கூழ் காய்ச்சுகிற பொழுது (ராகி, கேவுரு, கேப்பை (கேழ்வரகு) கொஞ்சம் சோற்றையும் சேர்த்துக் காய்ச்சுவார்கள். அப்படி சோறு சேர்க்காத கூழை ’மொட்டைக் கூழ்’ என்பார்கள். செடி கொடியை ஆடு மாடு தின்றுவிட்டால் ’மொட்டையா தின்னுட்டு போயிருச்சே’ என்பது வழக்கம். மழை இல்லாமல் வெயிலுக்கு வெப்பம் தாங்காமல் மரம் காய்ந்து போயிருந்தல் ’மொட்டை மரம்’ என்று சொல்வதுண்டு. பென்சில் கூர்மையின்மையை ’மொட்டையா எழுதுது’, ’மொட்டையா இருக்கு’ என்பதுண்டு.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேசினால் ’மொட்டையா பேசுறியே’ என்பார்கள். தேவையான விளக்கம் இல்லாத ஒன்றை ’மொட்டையாக இருக்கே’ என்று சொல்வதுண்டு. மொட்டைக் கோபுரமும் உண்டு. மொட்டை என்பதற்கு மயிர் நீங்கிய நிலை, கூரின்மை, அறிவின்மை, புத்தி கூர்மையற்று இருத்தல், வெறுமை, முழுமையின்மை, மணமாகாத இளைஞன், கையெழுத்து இடம் பெறாத மனு, முழுமை இல்லாமல் இருக்கும் தொகுப்பு இப்படி சூழலுக்கேற்றார் போல் மொட்டை என்ற சொல்லைப் பயன்படுத்துவதுண்டு. மொட்டைக் கத்தி, மொட்டை மாடு, மொட்டை வசனம், மொட்டை பிளேடு, மொட்டை கத்திரிக்கோல் இப்படி கூர்மையின்மைக்கு நிறைய சான்று சொல்லலாம். ’மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதே’ என்ற பழமொழியும் இருக்கிறது.