எங்கள் ஊரிலும் (ஏ) மாற்றம்!

சிறுபிள்ளையில் ஓடிப் பிடித்து
விளையாடிய தெருக்கள்
குறுகிப்போனது
மனிதர்களின் மனதைப் போல....
ஊஞ்சல் கட்டி ஆடிய
என் வீட்டு வேப்பமரம்
பறவைகள் கூடு கட்டிய
ஆத்தங்கரை ஆலமரம்
புளியங்காய் பொறுக்கிய
சாலையோர புளியமரம்
அலைபேசிக் கோபுரங்களாயின...
உட்கார்ந்து கதை கேட்ட
திண்ணைகளெல்லாம்
வீட்டின் சுற்றுச் சுவர்களாயின...
சாணம் தெளித்துக்
கோலம் போட்ட
வாசல்களெல்லாம்
தார்ச் சாலைகளாயின...
நீ நான் என வரிசை போட்டு
காத்திருந்து தண்ணீர் பிடித்த
ஆழ்துளைக் கிணறுகளெல்லாம்
ஊராட்சிக் குழாய்களாயின...
வளம் கொழித்த
வயல்களெல்லாம்
வசதியுடைய வீடுகளாயின...
மீன் பிடித்து விளையாடிய
வாய்க்கால்களெல்லாம்
தண்ணீர் வற்றி
நடைபாதைகளாயின...
முப்போகம் விளைச்சலைத் தந்த
கிணற்று நீர்
சுத்திக்கரிப்பு செய்து
தூயக்குடிநீர் என்று
புட்டிகளில் அடைக்கப்பட்டு...
விற்பனைக்குப் போயின...
வயலில் களையெடுத்த
பொன்னம்மா அக்கா
காத்திருக்கிறாள்
நூற்பாலை வேலைக்குக்
கூட்டிப் போகும் பேருந்துக்காக...
வாய்க்கால் வெட்டுவதில்
வல்லுநர் எனப் பேரெடுத்த
வடிவேல் மாமா
வேறு வழியின்றி
வெடிகள் தயாரிக்கும்
வேலைக்குப் போகிறார்....
ஊரிலிருந்த ஓட்டு வீடு
காரை வீடானது
காரை வீடு
மாடி வீடானது...
வேப்ப மரத்தடியில்
வாங்கிய காற்றைத் தேடி
முற்றத்தில் அமர்ந்திருக்கும் தாத்தா
சாளரத்தின் வழியில்
வந்த காற்றை
மின்விசிறியில் தேடும் அப்பா
இந்தக் காற்றெல்லாம் போதாதென
குளிரூட்டப்பட்ட அறையில்
போய் படுத்திருக்கும் மகள்...
மாற்றம் பல கண்டது ஊர் - ஆனால்
மாற்றத்திற்கு எந்தப் பொருளும் தெரியாமல்
இன்னும் அப்படியே இருக்கிறது...
தெருக்களில் சாதியும்...
மனிதர்களின் குணமும்...!
- முனைவர் நா. சுலோசனா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.