நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.
இந்த சந்திராஷ்டம நாளன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்யமாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
உங்கள் நட்சத்திரத்திற்கு 17 ஆவது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.
பிறந்த நட்சத்திரத்திரத்திற்கான சந்திராஷ்டம நட்சத்திரத்தைக் கீழ்க்கண்ட பட்டியலின் வழியாக அறிந்து கொள்ளலாம்.
அஸ்வினி - அனுஷம்
பரணி - கேட்டை
கிருத்திகை - மூலம்
ரோகிணி - பூராடம்
மிருகசீரிஷம் - உத்திராடம்
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - அவிட்டம்
பூசம் - சதயம்
ஆயில்யம் - பூரட்டாதி
மகம் - உத்திரட்டாதி
பூரம் - ரேவதி
உத்திரம் - அஸ்வினி
அஸ்தம் - பரணி
சித்திரை - கிருத்திகை
சுவாதி - ரோகிணி
விசாகம் - மிருகசீரிஷம்
அனுஷம் - திருவாதிரை
கேட்டை - புனர்பூசம்
மூலம் - பூசம்
பூராடம் - ஆயில்யம்
உத்திராடம் - மகம்
திருவோணம் - பூரம்
அவிட்டம் - உத்திரம்
சதயம் - அஸ்தம்
பூரட்டாதி - சித்திரை
உத்திரட்டாதி - சுவாதி
ரேவதி - விசாகம்