பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். பஞ்சாங்கம் என்பது திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து முக்கிய வானியல் அம்சங்களை (ஐந்து அங்கங்கள்) தினசரி அடிப்படையில் கணக்கிட்டு வழங்கும் இந்து ஜோதிட நாட்காட்டி ஆகும். இது சூரிய, சந்திர இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, சுபமுகூர்த்தங்கள், கிரகணங்கள் மற்றும் நல்ல நேரங்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
1. வாக்கியப் பஞ்சாங்கம்
2. திருக்கணிதப் பஞ்சாங்கம்
வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும், திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 6 மணி 48 நிமிடம் வரை வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாகவும் இருக்கும்.
வாக்கியப் பஞ்சாங்கம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷிகள் ஒன்றுகூடித் தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு இயற்றிய சுலோகங்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவது வாக்கியப் பஞ்சாங்கமாகும். காலமாற்றத்தினால் எவ்விதமான மாற்றத் திற்கும் உட்படாத, அல்லது திருத்தப்படாத பஞ்சாங்கமாக, வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. நம் முன்னோர்களின் கருத்துகளையும் அவர்கள் பின்பற்றிய கணித முறைகளை இன்றும் சிறிது கூட மாற்றாமல் பழமையைப் பிரதிபலிக்கும் பஞ்சாங்கம் வாக்கியப் பஞ்சாங்கமாகும். தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களில் இறைவழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ் சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப்படுகின்றன.
திருக்கணிதப் பஞ்சாங்கம்
18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தொலைநோக்கி உதவியின் மூலம் கிரக நிலைகளையும், சந்திரனது சுழற்சிப் பாதையில் ஏற்படும் சிறு சிறு வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டும் எழுதப்பட்ட பஞ்சாங்கம் திருக்கணிதப் பஞ்சாங்கமாகும். சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவு என்பதால், மற்றக் கிரகங்களின் ஈர்ப்பு விசைக்கு ஆட்படுவதால் சந்திரனின் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. லஹரி அயனாம்சத்தை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படும் மற்றும் கணித முறைகளில் சில மாற்றங்களைத் திருத்தி செய்து வெளியிடப்படும் பஞ்சாங்கம் திருத்தப்பட்டக் கணிதம் அல்லது திருக்கணிதப் பஞ்சாங்கம் ஆகும். பெரும்பாலான ஜோதிடர்களால் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் மூலம் ஜாதகம் கணிக்க மற்றும் ஜாதகப் பலன் உரைக்க பயன்படுத்தப்படுகின்றது.