சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் பேராசியரால் எழுதப் பெற்றிருக்கும் இந்நூல் பதினான்கு தலைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. உப்பின் வகைகள் மற்றும் அவை உருவாக்கப்படும் முறைகள் என்று தொடங்கும் முதல் பகுதியில், உணவில் சிறிய அளவே சேர்க்கப்படும் உப்பைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், உப்புக்கு உலகம் முழுவதுமிருக்கும் சந்தை மற்றும் உப்பு உற்பத்தியை அதிகரித்தல் தகவல்களுடன், தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியை மேம்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டு, பொருளாதாரத்தில் உப்புக்கு மதிப்பு மிகவும் அதிகம் என்று இந்நூலின் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் உப்பின் முக்கியத்துவம், உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம், அப்போராட்டத்தின் போது இயற்றப்பட்ட தமிழ்ப் பாடல்கள், வேதாரண்யத்தில் அமைக்கப்பட்ட சத்தியாக்கிரக நினைவுத்தூண் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் வழியாக, அன்றைய அரசியலில் உப்புக்கு கொடுக்கப்பெற்ற முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
சங்கக் காலத்தில் உப்பு உற்பத்தி செய்து, அதனைச் சந்தைப்படுத்தும் தொழிலைச் செய்து வந்த உமணர்கள் எனும் இனக்குழு நெய்தல் நிலத்தில் வாழ்ந்தனர் எனச் சொல்லி, அக்குழுவினருக்கான பல்வேறு பெயர்கள், அவர்கள் உப்பைக் கொண்டு செய்த பண்டமாற்று வணிக நடைமுறை மற்றும் உப்பைச் சார்ந்திருந்த நெய்தல் நில மக்களின் வணிக முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.
சங்க இலக்கியத்தில் உப்புத் தொழிலைக் கருவாகக் கொண்ட பாடல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. உமணர் ஒழுகை, உப்பு விற்பனை, உமணப் பெண்களின் வணிகம், மறைந்து போன உமணர்கள் வணிகம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெற்றிருக்கும் உப்பு, காப்பியங்களில் இடம் பெற்றிருக்கும் உப்பு, சிற்றிலக்கியங்களில் உப்பு, பக்தி இலக்கியங்களில் உப்பு என்று தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற உப்புக்கான பாடல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
உழவுத் தொழில், நெசவுத்தொழில் போன்று, உப்புத் தொழிலும் முதன்மையானது என்பதுடன், உப்பளத் தொழிலை முதன்மையாகக் கொண்டு ராஜம் கிருஷ்ணன் எழுதிய கரிப்பு மணிகள், இந்தியா டுடே இதழில் வெளியான பாவண்ணனின் உப்பு சிறுகதை, லட்சுமி சரவணக்குமார் எழுதிய உப்பு நாய்கள், கோணங்கியின் உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை, வெ. சுந்தர்ராஜின் உப்பளம் நாவல், சக்திஜோதியின் உப்பின் இரகசியம் கவிதைத் தொகுப்பு, லண்டனைச் சேர்ந்த ராய் மாக்சம் ஆங்கில மொழியில் எழுதிய 'The Great Hedge of India' நூலினை, சிறில் அலெக்ஸ் தமிழில் மொழி பெயர்ப்பு செய்த ‘உப்பு வேலி’, க.சீ. சிவக்குமார் எழுதிய உப்புக் கடலைக் குடிக்கும் பூனை சிறுகதை, வித்யா சுப்பிரமணியம் எழுதிய உப்புக் கணக்கு, ராமகிருஷ்ணன் குமரநல்லூர் மலையாள மொழியில் எழுதிய நாவலை உதயசங்கர் தமிழில் மொழி பெயர்ப்பு செய்த ‘கொக்கும், கொசுவும், மரங்கொத்தியும் உப்பு விற்ற கதை’, சிவக்குமார் முத்தையா எழுதிய உப்பு சிறுகதை, எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உப்பு வயல், தூத்துக்குடி ஸ்ரீதர கணேசன் எழுதிய உப்பு வயல், சு. தமிழ்ச்செல்வி எழுதிய அளம், நாஞ்சில் நாடன் எழுதிய உப்புக் கிணறு, போன்றவைகளுடன், சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரியில் இடம் பெறும் உப்பு, சோ. தர்மன் எழுதிய நீர்ப்பழியில் இடம் பெறும் உப்பு, சிறுவர் கதைகளில், விடுகதைகளில், கவிதைகளில் இடம் பெறும் உப்பு... இப்படி உப்பு இடம் பெற்ற பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஜப்பானியத் திரைப்படமான The Ballad of Narayama (நாராயாமாமலை), இந்தி மொழித் திரைப்படம் நமக் ஹலால், தமிழில் வெளியான் உப்புக் கருவாடு திரைப்படம், அமெரிக்காவில் வெளியான Salt, மலையாள மொழியில் வெளியான Salt and Pepper எனும் படங்களின் தலைப்புகளிலும் உப்பு இருந்திருக்கிறது. மேலும், திரைப்படங்களில் இடம் பெற்ற உரையாடல்களில், பாடல்களில் உப்பு இருந்திருக்கிறது என்கிற தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ் மொழியில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு பழமொழிகளில் உப்பு குறித்துப் பல பழமொழிகள் இருக்கின்றன. அவை, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல செய்திகளைக் கொண்டிருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழர் பயன்பாட்டிலிருந்த மருத்துவ முறைகளிலும், தற்போதைய அலோபதி மருத்துவத்திலும் உப்புப் பயன்பாடும், அது அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ ஏற்படுத்தும் பாதிப்புகள் போன்ற பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
உப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பல்வேறு ஊர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழர் பண்பாடு மற்றும் சடங்குகளில் உப்புப் பயன்பாடு குறித்தத் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதே போன்று, நாட்டுப்புறப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் உப்பு, கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கும் உப்பு குறித்தத் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், தமிழ்நாட்டில் உப்பைக் கொண்டு உருவாகி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயன்பாட்டிலிருந்து வரும் பல சொற்களை நல்ல விளக்கத்துடன் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்நூல் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பொதுவாக அனைவரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் நிறைய தரவுகள் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. உப்பைச் சாதாரணமாக நினைத்துக் கொண்டு, முக்கியத்துவமில்லாத ஒன்றை ‘உப்பு பெறாத விஷயம்’ என்று சொல்லி ஒதுக்கும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. இந்நூலை முழுமையாகப் படித்தால், அந்தப் பழமொழி பொருளற்றது என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.