நூலின் தலைப்பு, அட்டைப்படம் ஆகியவை இந்நூலைப் படிக்க வேண்டுமென்கிற வேட்கையை உண்டாக்கும் வழியில் அமைந்திருக்கிறது.
‘அம்மா இது உனக்கே தகுமா?’ என்ற சிறுகதை தொடங்கி, ‘புது மாப்பிள்ளை’ என்ற சிறுகதை வரையுள்ள அனைத்துச் சிறுகதைகளுமே எதிர்பாராத திருப்பமும் உச்சகட்டமும் உடையதாக எழுதப்பட்டிருப்பது நூலாசிரியரின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
முதல் கதை திகைப்பை ஏற்படுத்துவதோடு, பெண்கள், எந்த உறவு முறை ஆண் என்றாலும் அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் தருகிறது.
இன்றைய சமூகத்தில், பெண்கள் சந்திக்கும் துன்பங்களை உற்று நோக்கிக் கவனித்து, அவற்றை அப்படியே வாசகர்களும் உணரும்படியாகக் கதைகள் எழுதப்பட்டு இருப்பது மிகச் சிறப்பாகும்.
கதைகளில் வரும் நிகழ்வுகள் அனைத்தும், படிப்பவர் தாமே கண்ணால் காண்பது போன்று உணர்வைத் தரும்படி எழுதப்பட்டு இருப்பது நூல் ஆசிரியரின் திறனைக் காட்டுகிறது. அழகாக, சுவைபட, கதை சொல்லும் ஆற்றல், நூலாசிரியருக்கு கைகூடியிருப்பது பாராட்டுக்குரியது.
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கதைகளும், அனைத்துத் தரப்புப் பெண்களும் படுகின்ற பாட்டையே உள்ளீடாகக் கொண்டிருக்கிறது.
இநூலில் இடம் பெற்றிருக்கும் கதைகள் அனைத்தையும் படித்து முடித்ததும்;
"கதை போலத் தோணும் -இது
கதையும் அல்ல- இதக்
கலங்காமல் கேக்கும் - ஓர்
இதயம் இல்ல"
என்கிறத் திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகள் அனைத்தும் சிறுகதைகள் என்றாலும், நூலை வாசித்து முடித்ததும் மனதுக்குள் சிறுகதையில் இடம் பெற்றிருக்கும் உருவங்கள் பேருருவம் எடுக்கின்றன.
"கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்னும் தலைப்பில் வந்த கவிப்பேரரசு வைரமுத்துவின் காப்பியம் போல், "கள்ளிப்பாலுக்குத் தப்பிய கதைகள் " என்ற இந்த நூலும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் தரமான படைப்பாகும்.
பெண்கள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசும் இந்நூலை, அனைத்துத் தரப்பினரும் வாங்கிப் படிக்க வேண்டும்.
சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் இந்நூலாசிரியர், தொடர்ந்து பல நூல்களை எழுத வேண்டும், பெண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தகுந்த முடிவுகளைத் தர வேண்டும்...! என்று வாழ்த்துகிறேன்.