கணினி, இணையத்தைத் தொடர்ந்து, உருவாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்கிற புதிய தொழில்நுட்பம், அனைத்துத் துறைகளுக்கும் தேவையான மிக முக்கியமான தொழில்நுட்பமாக இருக்கிறது. இத்தொழில்நுட்பத்தினை பள்ளி மாணவர்கள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தொழில்நுட்பத்தினைப் பெரும்பான்மையாக, ஆங்கில மொழியறிவு கொண்டவர்களே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆங்கிலமறிந்தவர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களும் அறிந்து கொள்ள வேண்டும். இத்தொழில்நுட்பத்தினைத் தமிழ் மொழி அறிந்தோர் அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்கிற மேலான எண்ணத்தில் இந்நூலாசிரியர் இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.
இந்நூலில் செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படைச் செய்திகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது? எந்த மாதிரியான செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் இருக்கின்றன? அந்தச் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை எப்படிப் பயன்படுத்தலாம்? செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் நம் தேவையை எப்படித் தெரிவிப்பது? தேவையை எப்படிச் சரியாகப் பெறுவது? போன்றவை செயல்முறையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் கல்விசார் பணிகளிலிருப்பவர்கள் மட்டுமின்றி, வேளாண்மைப் பணி செய்பவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சிறுதொழில் மற்றும் சிறு வணிகம் செய்பவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம்? அன்றாட வாழ்க்கைக்குச் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் எப்படி உதவுகின்றன? வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு எப்படி உதவுகிறது? மாற்றுத் திறனாளிகளுக்கு எப்படி உதவுகிறது? வங்கி மற்றும் அரசுச் சேவைகளுக்கு இதனை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? என்று எளிமையான மக்களுக்குச் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதுடன், இதனால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அத்துடன் கவனிக்க வேண்டிய சில குறிப்புகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள் குறித்தும், கணினியில் செயற்கை நுண்ணறிவுத் தளங்களைச் செயல்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. சாட்ஜிபிடி, க்ரோக், ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, டிசைனர் ஏஐ போன்ற தளங்களில் என்ன செய்யமுடியும் என்பது குறித்துச் சில செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளும் தரப்பட்டிருக்கின்றன. செல்பேசியில் செயற்கை நுண்ணறிவுத் தளங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? என்பது குறித்தும் செயல்முறை விளக்கங்களுடன் சொல்லப்பட்டிருக்கினறன.
கல்வி, மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சட்டம், வணிகம், நிதி, ஊடகம், கட்டிட வடிவமைப்பு, வேளாண்மை, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, நிருவாகம், சேவைகள் மற்றும் பல்வேறு தொழில் துறைகளிலானவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்தத் தகவல்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தளங்களில் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
அனைத்துப் பிரிவினருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அவசியமான ஒன்றாக இருக்கும் என்றாலும், அதில் சில ஆபத்துகளும் காத்திருக்கின்றன என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. கடைசியாக, தற்போது பயன்பாட்டிலிருக்கும் 100 செயற்கை நுண்ணறிவுத் தளங்களை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் பட்டியலிட்டுத் தரப்படிருக்கிறது.
கல்லூரிகளில் படிக்கும் அனைத்துப் பிரிவு மாணவர்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி அமைந்திருக்கும் இந்நூலினை அனைத்து மாணவர்களும் வாங்கிப் படிக்க வேண்டும், தங்களுக்கு ஏற்றதாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயனடைய வேண்டும்.