சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவரும், ‘கண்ணீர்ப் பூக்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகி, ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் நூல் மூலம் புகழ் பெற்றவரும், ‘புதுக்கவிதைகளின் தாத்தா’ என்று போற்றப்படுபவருமான கவிஞர் மு. மேத்தா, இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருப்பதே இக்கவிதை நூலுக்கு மிகப்பெரும் சிறப்பு என்று சொல்லலாம்.
ஜப்பானிய மொழியிலிருந்து உலகெங்கும் பரவி, தமிழிலும் ஆழமாக வேரூன்றிய ஒரு அற்புதமான கவிதை வடிவமான ஹைக்கூ வடிவத்தில், மின்மினிக் கவிதையாக வெளியாகி இருக்கும் இந்நூலில், அழகியல், உணர்ச்சி, பரந்த பார்வை, சமூக ஈடுபாடு, காட்சிப் படிமம் என்று பல கருத்துகளைக் காண முடிகிறது. நூலாசிரியரின் முதல் நூலே மின்னிப் பிரகாசிக்கிறது.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் சில மின்மினிகளைப் பார்க்க முடிகிறது.
”அழகாய்த் தென்பட்டது
உலகோர் கண்பட்டது
முகிலாடை விலக்கிய நிலா”
”இரவிலே தனியாய்
உலகழகி
நிலா”
”எம்புட்டு வயசானாலும்
அம்புட்டு அழகு...
நிலா”
- என்று மாறுபட்டக் கோணங்களில் நிலாவை அழகாக ஒளிரச் செய்திருக்கிறார்.
”தேடுபவர்கள்
தொலைப்பார்கள்
புத்தகவெளியில் அறியாமையை!”
- என்று புத்தக வாசிப்பினால் அறியாமை எனும் சிறுமை அழியும் என்று வழிகாட்டுகிறார்.
”வாழ்ந்து காட்டுகின்றன
வறண்ட இடத்தில் வளமாய்
பனை மரங்கள்”
- என்று சின்னச் சின்னப் பிரச்சினைகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்கு நம்பிக்கையை நடவு செய்திருக்கின்றார்.
”எவரும் விரும்புவதில்லை
விரும்பி வருகின்றன
கவலைகள்!”
- என்று ஒவ்வொருவரின் விருப்பங்களும், அவர்கள் விரும்பாத கவலைகளாக உருமாற்றம் கொள்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறார்,
”ஆட்டம் பாட்டம் அடங்கியவருக்கு
இறுதி ஊர்வலம்
ஆட்டம் பாட்டமாய்”
- என்று வாழ்ந்து முடித்தவரின் இறுதிச் சடங்கு நிகழ்வினைக் குறிப்பிடும் கவிஞர்,
”விட்டுப் போகையில்
விடாமல்
நெற்றியில் காசு!”
- என்று உயிரற்ற உடலுக்குப் பணத்தால் மதிப்பூட்ட நினைக்கும் மதியீனத்தை வெளிக்காட்டுகிறார்.
”உயர்ந்த இடத்தில்
சிறிதும் உயராமல்...
மலைவாழ் மக்களின் வாழ்க்கை”
- என்று உயர்ந்த இடத்திலிருந்தாலும், குறுகிய வட்டத்திற்குள் இருந்தால் உயர்வடைய முடியாது என்று உதாரணம் சொல்கிறார்.
”அள்ள அள்ள
குவிகிறது
மணல் திருட்டில் லாபம்”
- என்று மணற்கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
”வாழ்கின்றன
வெளிச்சம் போட்டு
மின்மினிப் பூச்சிகள்”
”கண்களைத் திறந்தாலே
அழுகை தான்
அணைக்கட்டு!”
”தழுவிக் கொண்டே
என்ன சொல்லுமோ காற்று
தலையசைத்தபடி மரங்கள்”
”உதிர்ந்த இலைகள்
விழாமல் பறந்தன
ஓ கிளிகள்”
”தீபம் ஏற்றியதும்
அணைந்து போகிறது
தீக்குச்சியின் தியாக வாழ்க்கை”
- என்பது போன்ற தான் கண்ட காட்சிகளைக் கவிதைகளாக வடித்திருக்கிறார்.
இவை தவிர, இந்நூலில் கவிதைகளின் வழியாக இயற்கையை ரசிக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்துகிறார். கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடித்தனங்கள் பெருகி வருவதைக் கண்டிக்கிறார்.
இந்த மின்மினிகளின் ஊர்வலத்தில் அனைவரும் பங்கேற்று, மின்மினிக் கவிதைகளை வாசித்துப் பார்க்க வேண்டும்...! கவிதைகளின் சுவையை ருசித்துப் பார்க்க வேண்டும்...!!