மீண்டும்... மீண்டும்... நினைத்துப் பார்க்கும் வண்ணம் மனதில் நிற்கிறது, நிற்க.. கற்க!
இதற்கு முன்பு ஒன்பது நூல்கள் எழுதியிருக்கும் நூலாசிரியருக்கு, இந்நூல் இரண்டாவது சிறுகதை தொகுப்பு நூல்.
கல்வியும் கல்விசார் கதைக்களமும் என்று நூலில் குறிப்பிட்டிருந்தாலும், பெரும்பாலான சிறுகதைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அழுத்தமான சிறுகதைகளாக எழுதப்பட்டுள்ளன. நிகழ்வுகளை அடுக்கடுக்காகக் கோர்த்து மிக நேர்த்தியாகவும், எதார்த்தமாகவும் கதையாக்கம் செய்திருக்கிறார். அனைத்துச் சிறுகதைகளிலும் கதாபாத்திரங்களின் உளவியலை அழகாகவும், ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார். மனித உணர்ச்சிகளையும், வாழ்க்கையின் எதார்த்தங்களையும், இயல்பையும் நடத்தையையும் மிகச் சிறப்பாக விவரிக்கிறார். யதார்த்த உலகை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதில் சிறுகதை மன்னன் மாப்பசானை நினைவுகூர்கிறார். கதைச் சூழலை வசீகரமாக்கிக் கொள்கிறார்.
நிற்க, கற்க! எனும் சிறுகதையில் “எட்டு ஆண்டுகளாக பள்ளியிலும், வீட்டிலும், உறவுகளிடத்திலும் தன் கையெழுத்தால் எவ்வளவு அவமானங்கள், தலை குனிவுகள், கேலிச்சிரிப்புகள், அவமானம் ஒரு பக்கம், இத்தனையையும் சந்தித்தப் பிறகும், தன்னால் அழகாக நேராக எழுத முடியவில்லையே... என்ற வருத்தம் மறு பக்கம் என மனசைப் புரட்டியெடுத்து பல இரவுகளைப் பகலாக்கியிருக்கிறான், முடியப்பன். எப்போதுமே முடியப்பனுக்கு, அபாய அறிகுறியாகத் தெரியும் சிவப்பு மை இன்று, “நன்று... மேலும் முயல்க... “ என்னும் ஆசிரியரின் கையெழுத்தில் கீழ்வானக் கதிரவனின் இளஞ்சிவப்பு விடியலாய் முகம் காட்டியது. இது வரை அவமானங்களையே அள்ளித் தந்த தன் கையெழுத்து முதன் முறையாய் “நன்று“ என்னும் வெகு மானத்தைப் பரிசளிக்கிறது“
.
குழந்தைகள் நாள் விழா சிறுகதையில் “சின்னஞ்சிறு குழந்தைகளைப் பார்ப்பதே அழகு. அதுவும் மாறுவேடம் போட்டு வந்திருந்த குழந்தைகளின் அழகை அசைவைக் காணக் கண் கோடி வேண்டும். மாறுவேடப் போட்டிக்கு வந்திருந்த பிள்ளைகள் சிறிய மேசையில் வரிசையாய் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
கொஞ்சம் ஒப்பனைக்குத் தாமதமான வீரபாண்டிய கட்ட பொம்மன் சங்கிலிகள் கட்டாமலேயே பெற்றோரால் தரதரவென்று இழுத்து வரப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேசத்தலைவர்கள். முதலில் உட்கார்ந்திருந்த காந்தியடிகள் கம்பைத் தூக்கிப் போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த இரானுவ வீரரின் துப்பாக்கியை வாங்கி ஏந்தியபடி பாசத்திற்குரிய பாரதிராஜாவின் கேமராவிற்கு போஸ் கொடுத்தார். பக்கத்திலிருந்த பாரதியார் முண்டாசைக் கழற்றி வைத்துவிட்டு மன்னனின் கிரீடத்தை அணிந்து சிரித்தார்.
மன்னனோ பிச்சைக்காரனின் தட்டில் கிடந்த சில்லறைகளை எடுத்து வைத்துக் கொண்டு வம்பிழுத்தான். அப்துல்கலாம் ஐயா ஏவுகணையை விவசாயியிடம் கொடுத்துவிட்டு விவசாயியின் ஏர்கலப்பையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தார். எம்ஜிஆரின் தொப்பியைக் காமராசரும் காமராசரின் கதர் துண்டை எம்ஜிஆரும் மாற்றி அணிந்து அழகு பார்த்தார்கள். திருடன் வைத்திருந்த சாக்லேட்டை போலிஸ் பிடுங்கிக் கொள்ள அழுது கொண்டிருந்த திருடனை ஹிட்லரும் அன்னை தெரசாவும் சமாதானப்படுத்தி சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்“ என்று குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் அழகியலையும் உளவியலையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கதையின் கடைசி வரியில் “குனிந்தபடி சத்தம் போடாமல் அழுது கொண்டிருந்த நேருவின் கண்ணீர் காகித ரோஜாப்பூ மீது பட்டு சிவப்பு நிறத்தில் இரத்தக்கண்ணீராய் மண்ணில் கொட்டிக்கொண்டிருந்தது“ என்று முடித்திருப்பது மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கிறது.
ஒற்றைப் போராளி டிராபிக் ராமசாமியை மையமாகக் கொண்டு, சமூக மாற்றத்திற்கு வித்திடச் செய்ய முனையும் “துணிந்து கேளுங்கள்“ சிறுகதை. இந்தச் சிறுகதை தொகுப்பிற்குக் கூடுதலாய் சூட்டப்படும் மணிமகுடம்.
மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்!