குழந்தைகள் பாடப்புத்தகங்களில் இருப்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமின்றி, அரியதான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், குழந்தைகளின் சிந்தனைத் திறனுடன், வாசிப்புத் திறனையும் அதிகரிக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் சிறுவர்களுக்கான இதழ்கள் தோற்றம் பெற்றன. தமிழ் மொழியில் அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, கோகுலம், கண்ணன் என்று பல்வேறு சிறுவர் இதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. தமிழில் வெளியாகும் நாளிதழ்களும் தங்களது நாளிதழுடன் இணைப்பிதழ்களாகச் சிறுவர் இதழ்களை வழங்கிக் கொண்டிருந்தன.
கணினி மற்றும் இணையப் பயன்பாடு, திறன்பேசிகளின் பயன்பாடு அதிகரிப்புகளால் சிறுவர்களிடையே சிறுவர் இதழ்களுக்கான வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. இதனால், தமிழில் வெளிவந்த பல சிறுவர் இதழ்கள் நின்று போய்விட்டன. நாளிதழ்களின் இணைப்பிதழ்களான சிறுவர் இதழ்களும் வாசிப்பின்றி, பக்கங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து பெயரளவில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சிறுவர் இதழில் அவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியான படைப்புகள் அதிக அளவில் இடம் பெற்று வந்தது. அவற்றுள், படக்கதை (Comics) என்பது கதைகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். படக்கதைகள் என்பது படங்களாகவும், உரையாடல்களைச் சிறு கூண்டு வடிவங்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படக்கதைகளைப் படிக்கும் போது, திரைப்படம் பார்ப்பது போன்ற அனுபவம் ஏற்படும். அதுமட்டுமின்றி, சிறுவர்கள் அது குறித்து கற்பனை செய்து, தங்களது சிந்தனைத் திறன்களை அதிகரித்துக் கொள்ள முடிந்தது.
முழுமையான படக்கதையை உள்ளடக்கமாகக் கொண்டு, படக்கதைப் புத்தகம் (Comics Book) சிறுவர்களுக்கான புத்தகங்களில் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. ஆனால், அதுவும் தற்போது படக்கதைப் புத்தகங்களும் காணாமல் போய்விட்டன. காணாமல் போன படக்கதைகளை மீட்டுக் கொண்டு வரும் நோக்கத்துடன், தனது புதிய முயற்சியாக, நூலாசிரியர் ‘ஈகிள் கேர்ள் சாகசங்கள்’ எனும் புதியப் படக்கதைப் புத்தகத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்தப் படக்கதைப் புத்தகத்தில், முதல் பக்கத்தில் ஈகிள் கேர்ளை அறிமுகப்படுத்தும் நூலாசிரியர், சிங்கமுகனுடன் மோதல், கப்பலைக் காப்பாற்றினாள், ஈகிள் கேர்ள் தோழர்கள், எதிரி நாட்டுப் படையை வென்றாள், விலங்குகளுக்கு உதவுதல், கொள்ளையர்களை ஒழித்து மக்களைக் காப்பாற்றினாள், ஈகிள் கேர்ளின் உலகப் பயணம், சித்திரபுரியில் சாகசங்கள், சந்திரபுரியில் ஈகிள் கேர்ள், சொர்ணபுரியில் புதிய சாகசம் என்கிற தலைப்புகளில் ஈகிள் கேர்ளின் சாகசங்களைப் படக்கதையாகத் தந்திருக்கிறார்.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஈகிள் கேர்ள் மட்டுமின்றி, படக்கதையில் இடம் பெற்றிருக்கும் ஈகிள் கேர்ள் சாகசங்கள் புத்தகத்திலுள்ள அனைத்துப் படங்களும் புதியத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் புதிதாக உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நூலாசிரியரின் இந்தப் புதிய முயற்சியையும் சாகசம்தான் என்று பாராட்டி மகிழலாம்.
இந்துச் சமயப் புராணங்களில் இடம் பெறும் கருட பகவான் செய்தப் பல்வேறு சாதனைகளைப் போன்று, இந்த ஈகிள் கேர்ளும் பல்வேறு சாகசங்களை இப்புத்தகத்தில் செய்து காட்டியிருக்கிறார். இந்தச் சாகசங்களைப் படங்களுடன் படிக்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கிறது. சிறுவர்களுக்கான படக்கதைப் புத்தகமாக இருந்தாலும், இப்புத்தகத்தைச் சிறுவர்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமென்பதில்லை, பெரியவர்களும் படிக்கலாம். இப்புத்தகத்தைப் படிக்கப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கிப் படித்த இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் போன்ற கதாப்பாத்திரங்கள் நினைவுக்கு வந்து சென்றன.
ஈகிள் கேர்ள் எனும் புதிய வரவை வரவேற்கலாம், வாய்ப்புடையவர்கள் அனைவரும் வாங்கிப் படிக்கலாம். பள்ளிகள் அனைத்தும் இது போன்ற படக்கதை நூல்களைப் பள்ளி நூலகங்களுக்கு வாங்கி வைத்திட வேண்டும். பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்திட வேண்டும்.