இந்நூலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பான்மையான கவிதைகள், நெடுங்கவிதைகள். இருப்பினும், அனைத்தும் சோரம் போகாமலும், படிப்போர் சோர்ந்து போகாமலும் தெளிந்த நீரோட்டம் போல் சலசலத்து ஓடி, படிப்போர் மனதில் தடம் பதிக்கிறது.
இந்நூலாசிரியர் தனது கவிதைகளின் வழியாக, சமூக அவலத்தின் மீது பெருங்கோபம் கொள்கிறார். அறியாமை இருட்டுக்கு எதிராகத் தீக்குச்சியை உரசிப் போடுகிறார். அநீதிக்கு முன்னே வாள் ஏந்தி நிற்கிறார். இன்னமும் நம் சமூகம் காணவேண்டிய மாற்றங்கள் குறித்து கனவும் காண்கிறார். நூல் முழுவதும் சொற்சிலம்பம் ஆடுகிறார். பக்கங்கள் தோறும் கருத்துக் குவியலை விரவி வைத்திருக்கிறார். படிக்கும் வாசகர் மனதில் பற்றிப் படரவும் செய்கிறார்.
“நான்“ எனும் தலைப்பிலான கவிதை. “இருளுக்கு இன்னல் தரும் தீச்சடர் கொண்ட தீபம் நான்...“ அறிமுகத்திலேயே உலைக்கலம் கண்ட போர்க்கருவி நான், இருள் என்னை என்ன செய்துவிடும்? என்கிற மனஉறுதியைப் பட்டை தீட்டுகிறார். எட்டையபுரத்து விதை நெல்லே... என்பதில் முண்டாசுக் கவிஞன் பாரதியை “பாட்டுக் கவிகள் எழுதி பாரை உயர்த்தியவன்“ என்று சொல்லி, பாரதியின் வாழ்வையும் மாண்பையும் உணர்த்துகிறார்.
“தலைமைப் பொருள் என்பது
தவிப்போருக்காக
நம்பிக்கையை அளிக்கும்
நல்ல பொருள்“
என்று தலைமைக்குப் புதுப்பொருள் சேர்த்து அழகியலை மெருகூட்டுகிறார்.
“பொய்“கவிதையில் வாழ்வின் முரண்பாடுகளையும், பொய் - மெய் என்கிற உலகியலின் உளவியலை இருவேறு முனைகளையும் மிக சாதுர்யமாகவும் ஆழமாகவும் விவாதிக்கிறார்.
ஒவ்வொரு வரியிலும் எது பொய்? எது மெய்? என்று ஒப்பீட்டை கவிதையாக நகர்த்திச் சென்றிருப்பது லாவகமான உத்தி!
உலகில் நாம் உண்மையானது என்று நம்பும் பல விஷயங்களின் பின்னுள்ள மாயயை மிக அழகாக சுட்டிக்காட்டுகிறது.
“கண்ணாடி பொய்
சொல்லாது
கவிதைகள் பொய்
சொல்லும்“
கண்ணாடி புறத்தோற்றத்தை அப்படியே காட்டும் நேர்மை கொண்டது. ஆனால், கவிதைகள் அகத்தோற்றத்தை கற்பனைகளால் அலங்கரித்து பொய் பேசுகிறது. ஒப்பீட்டில் மனம் மிக்க மலர்களாய் கவிதை வடிவம் கொள்கிறது.
“அழகு பொய்
சொல்லும்
ஆத்மா பொய்
சொல்லாது“
ஆம்! அழகு ஆபத்தானது. அழியக்கூடியது. எளிதில் ஏமாற்றக் கூடியதுமாகும். ஆத்மா எப்போதும் உள் நிற்கும். தூய்மையான மெய்யை உணர்தக்கூடியது. தத்துவார்த்தமான உண்மை அழகாகப் பதிகிறது.
“தாயின் பாசம்
மெய்
சேயின் பாசம்
பொய்“
என்று தாயின் அன்பிற்கு எந்தவிதமான சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லை என்பதால் மெய்யாகிறது. ஆனால், பிள்ளைகளின் பாசம் அப்படியா இருக்கிறது? அது காலப்போக்கில் சூழலுக்கு ஏற்ப மாறிவிடுகிறதே! என்கிற கசப்பான உண்மையை உலகிற்கு நினைவூட்டுகிறது.
மெச்சும் சொற்கட்டும் நேரிடையான நடையும், சிந்தை குளிரும் தத்துவ வார்ப்பும் என அனைத்துக் கவிதைகளும், வாழ்வின் அன்றாட நிகழ்வுகளையும், தான் நம்பிக் கொண்டிருக்கும் மனிதர்களையும், உலக மாயயைகளையும் ஒரு கணம் சுயபரிசோதனை செய்யவைக்கிறது. வாசிப்பு இன்பத்தையும் கொடுக்கிறது.
கவிதை ஆர்வலர்கள் மட்டுமின்றி, அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய கவிதைப் புத்தகம் இது.