“என் வாழ்க்கையில்
நான் தவறுகள்
செய்திருக்கக்கூடும்
ஆனால்...
கவிதையில்
அப்படிச் செய்யவில்லை
காரணம்...
கவிதை என்பது
சத்தியம்
தங்கியிருக்கும்
சரணாலயம் என்பதை
நான் அறிவேன்...“
எனும் மகாகவி தாகூர் அவர்களது கவிதையை முன்னோட்டமாகத் தந்திருக்கும் நூலாசிரியரின் கவிதையில் தவறுகள் எதுவும் செய்யவில்லை. சமுதாய மேடு பள்ளங்களை அப்பட்டமாகத் தனது கவிதையில் படம் பிடித்திருக்கிறார்.
இந்நூலில் 1. வழிபாடு 2. அஞ்சலி 3. வாழ்த்து 4. சமுதாயம் என நான்கு பிரிவுகளாக பிரித்து தமிழின் வளத்தை செழுமைப்படுத்திருயிக்கிறார்.
ஒருவன் உள்ளத்தை அறிய வேண்டுமானால், அவன் சொற்களைக் கவனி! என்பது சீனத்துப் பொன்மொழி. இவர் கோடிட்டுக் காட்டும் சொற்களைக் கவனிக்கிறேன்.
இங்கு உதாரணத்திற்கு, “அஞ்சலி“யைப் பற்றிப் பார்ப்போம்!
அஞ்சலி என்பது வெறும் துயரப் பதிவு மட்டுமல்ல, அது ஒரு வாழ்வின் நிறைவை, தியாகத்தை, நினைவுகளைப் போற்றக் கூடிய உன்னதமான கலை. ஒருவரைப் பற்றிய உண்மையான மதிப்பீடும், அவரோடு வாழ்ந்த நினைவுகளும், அவர் விட்டுச் சென்ற சுவடுகளும் நாகரிகமான முறையில் வெளிப்படும் போது அது அஞ்சலி வடிவம் பெறுகிறது.
அவர் வாழ்நாளில் ஆற்றிய நற்பணிகள், சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகள், தனிப்பட்ட வாழ்வில் காட்டிய அன்பைப் பகிர்வது என அஞ்சலியை அழியாத் தன்மையாக்குகிறது.
அஞ்சலியில் ஆரவாரம் இருக்கக்கூடாது. சொற்களில் அமைதியும், கம்பீரமும், ஆழமான மரியாதையும் வெளிப்பட வேண்டும்.
அஞ்சலி செலுத்துவது ஒரு கலை. காரணம், அது மனித உணர்ச்சிகளையும், இலக்கிய நயத்தையும் ஒன்றிணைக்கிறது. மறைந்தவரை மீண்டும் வாழ வைக்கும் கலை. ஒருவரின் மறைவுக்குப் பின், வார்த்தைகளின் மூலம் அவரின் ஆளுமையை, குணநலன்களைக் கேட்போரின் அல்லது படிப்போரின் மனக்கண்ணில் ஒரு மீள் உருவாக்கம் செய்யும் கலை வடிவம்தான், அஞ்சலி!
அஞ்சலி என்பது வெறும் உணர்ச்சிப் பெருக்கு மட்டுமல்ல, அவை ஒரு மனிதனின் காலத்தையும், சாதனைகளையும் வருங்காலச் சந்ததிக்கு எடுத்துச் சொல்லும் வரலாற்று ஆவணமாகும்.
கவிஞர் மீராவுக்கும், இந் நூலாசிரியருக்கும் இடையே நிகழ்ந்த நிகழ்வுகளின் நினைவுகளின் தொகுப்பாக சொல்லி வரும் நூலாசிரியர்,
“இப்போது மட்டும்
ஏன் அழைக்க
மறந்தீர்கள்?
வரமாட்டேன்
என்று நினைத்து விட்டீர்களா?
அழைத்திருந்தால்
வந்திருப்பேன்
அழைக்காமல்
போனதென்ன?
தனியே எனை நிறுத்தித்
தனி வழியே
போனதென்ன?“
அஞ்சலிக் கவிதை வரிகளில் உண்மையான அன்பினாலும், இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த நினைவுகளாலும் நிறைவாய் உருவாகியிருக்கிறது.
இழப்பின் ஆழமும், மரியாதையும் ஒவ்வொரு வரியிலும் அமைதியாக வெளிப்படுகிறது.
மனோன்மணீயம் சுந்தரனார் இரங்கற்பா, சுவாமி விவேகானந்தர், கோபால கிருஷ்ண கோகலே ஆகியோருக்கு மகாகவி பாரதி செலுத்திய கவிதாஞ்சலிகள், அண்ணாவுக்கு கலைஞர் தீட்டிய அஞ்சலி, நேருவுக்கு, காமராஜருக்கு கவியரசு கண்ணதாசன் செலுத்திய அஞ்சலிகள், தமிழறிஞர்களும், கவிஞர்களும் மறைந்த சான்றோர்களுக்கு “இரங்கற்பா“ என்ற தனி நூல்களையே இயற்றி அஞ்சலி செலுத்திய மரபில், முனைவர் மு. பழனி இராகுலதாசன் அவர்களின் கவிஞர் மீரா அவர்களுக்கான கவிதாஞ்சலி மட்டுமல்ல, இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அத்தனையும் தனித்துவமே!
வீடும் வீடு சார்ந்தும் கவிதை நூல், கவிஞர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய கவிதை நூல் என்பதில் சந்தேகமில்லை.