மனிதனுக்கு வரும் பல கடுமையான நோய்களுக்குப் பூச்சிகள் பரப்பும் கிருமிகளே முதல் காரணமாக இருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை மனிதர்களுக்கு ஏற்பட்ட பல நோய்களுக்கும், மரணங்களுக்கும் பூச்சிகளால் ஏற்பட்ட நோய்களே முதன்மைக் காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை, மனிதனுக்கு மற்ற காரணங்களால் வந்த நோய்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுத்தல் குறித்து ஆய்வு செய்த ஆய்வுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
விலங்கு உயிரினப் பிரிவுகளில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான இனங்களைக் கொண்ட பெரும் பிரிவாக இருப்பது பூச்சிகள்தான். இந்தப் பூச்சிகளில், பெரும்பான்மையான பூச்சிகள் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மனிதனுக்கு நன்மை செய்யக் கூடியதாக இருக்கின்றன. வேளாண்மைப் பணிகளில் மகரந்த சேர்க்கை உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்குப் பூச்சியினங்கள் பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், வேளாண் உற்பத்தியில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடியதாகவும் சில பூச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன.
இதே போன்று, ஈ, கொசு, தெள்ளுப்பூச்சி, மூட்டைப்பூச்சி, பேன், சிற்றுண்ணிகள், சிறு பூச்சிகள், நரம்புச்சிலந்தி (Cyclops), கொறித்துத் தின்னும் உயிரினங்கள் (Rodents) என்று சில பூச்சியினங்கள் மனிதனுக்குப் பல்வேறு நோய்களைப் பரப்புவதில் முன்னிலையில் இருக்கின்றன. மனிதர்களில் ஆறு நபர்களுக்கு ஒருவர் எனும் விகிதத்தில் பூச்சிகளால் ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஈக்களின் மூலம் டைபாய்டு காய்ச்சல், பேதி, சீதபேதி, காலரா, இரைப்பை குடல் சார்ந்த நோய்கள், அமீபா தொற்று, புழுக்களின் நோய், இமைப்படலத்தில் அழற்சி, இமை அரிப்பு நோய் போன்றவை பரப்பப்படுகின்றன. கொசுக்களின் மூலம் மலேரியா, பைலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல், சிக்கன்குனியா போன்ற பல நோய்கள் பரப்பப்படுகின்றன.
கரப்பான் பூச்சி மூலம் குடல் சம்பந்தப்பட்ட நோய்த் தொற்றுகளும், தெள்ளுப்பூச்சி மூலம் பியூபோனிக், பிளேக், நச்சுக் காய்ச்சல், சிஜரோசிஸ் போன்ற நோய்களும், பேன் மூலம் தலையில் அரிப்பு, பரவும் நச்சுக்காய்ச்சல், ட்ரென்ச் காய்ச்சல் போன்ற நோய்களும், மூட்டைப்பூச்சி மூலம் சாகஸ் நோயும், கொறித்துத் தின்னும் உண்ணிகளால் நச்சுக் காய்ச்சல், நச்சு மூளை உறை வேக்காடு, திமிர்வாத உண்ணி நோய், கியூ காய்ச்சல், பிணியில் வீழ்த்தும் காய்ச்சல் போன்ற நோய்களும் பரப்பப்படுகின்றன.
பூச்சிகள் அவற்றின் உடலில் வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி போன்றவைகள் தங்குவதற்கு இடமளித்து விடுகின்றன. இந்தப் பூச்சிகளில் சில மனிதர்களின் உடலுக்கு வெளிப்புறமாகவும், சில உடலுக்கு உட்புறமாகவும் நோய்களைப் பரப்புகின்றன. ஈக்கள், கரப்பான் பூச்சிகள் போன்றவை மனிதர்களின் உடலுக்கு வெளிப்புறமாகவும், கொசுக்கள் மனிதன் உடலுக்கு உட்புறமாகவும் நோய்க்கிருமிகளைப் பரப்பி விடுகின்றன.
உலகின் மிகக் கொடியத் தொற்று நோய்களின் பட்டியலில் காசநோய்க்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலிருக்கும் மலேரியா நோய் கொசுக்களாலேயே பரப்பப்படுகிறது. கொசுக்களில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான இனங்கள் இருப்பினும், அவற்றுள் ஒரு சில வகைக் கொசுக்களேக் கடுமையான நோயைப் பரப்பி, உயிரிழப்பு வரையிலான மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.
ஆனோபெலஸ் எனப்படும் கொசு மனிதர்களுக்கு மலேரியா மற்றும் நிணநீர் வாதக் காய்ச்சல் நோயையும், ஏடிஸ் எனும் கொசு ஜிகா, டெங்கு, சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் நிணநீர் வாதக் காய்ச்சல் போன்ற நோய்களையும், கியூலக்ஸ் எனும் கொசு ஜப்பானிய மூளைக்காய்ச்சல், நிணநீர் வாதக் காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோயையும் மனிதர்களுக்குக் கடத்துகின்றன. இவை தவிர, வேறு சில இனக் கொசுக்களும் மனிதர்களிடையேப் பல்வேறு விதமான நோய்களைப் பரப்பிக் கொண்டேதான் இருக்கின்றன.
உலக மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள், கடுமையான நோய் பரப்பும் கொசுக்கள் இருக்கும் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே, உலக மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதம் பேரை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால், உலகம் முழுவதும் கொசுக்கள் என்றாலே பெரும் அச்சம் இருக்கத்தான் செய்கிறது.
கொசுக்கடியினால் மனித உயிர்களுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்துகள் குறித்து அறிந்து கொள்வதுடன், அதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 20 ஆம் நாளை உலகக் கொசு நாளாக அறிவித்திருக்கின்றனர்.
1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாளில் பிரித்தானியாவைச் சேர்ந்த சர் ரொனால்ட் ரோஸ் எனும் அறிவியலாளர், கொசுக்களில் பெண் கொசுக்களே மனிதனைக் கடித்து, இரத்தத்தைக் குடித்து மலேரியாவைப் பரப்புகிறது என்றும், கியூலக்ஸ் எனும் கொசு ஜப்பானிய மூளைக் காய்ச்சலைப் பரப்புகிறது என்றும் கண்டறிந்து தெரிவித்தார். அன்றைய நாளை உலகக் கொசு நாளாகக் கொண்டாட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்நாள் உலகக் கொசு நாள் என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளை கொசு ஒழிப்புக்கான விழிப்புணர்வு நாளாக உலகம் முழுவதும் கடைப்பிடித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும், கொசு ஒழிப்புக்கென்று பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்த போதும், கொசுவினை முழுமையாக அழிக்க முடியாமல் உலக நாடுகள் திணறிக் கொண்டுதான் இருக்கின்றன.
கொசுக்களில் ஆண் கொசுக்கள் தாவரங்களின் சாற்றை உறிஞ்சிக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன. ஆனால், பெண் கொசுக்கள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் இரத்தங்களை உறிஞ்சுகின்றன. பெண் கொசுக்களுக்கும் ஆண் கொசுக்களைப் போன்று தாவரங்களின் சாறுகளே போதுமானது. இருப்பினும், அவை ஆண் கொசுக்களுடன் இணைந்த பிறகு, அதற்கான முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதச் சத்துக்களுக்காக மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன.
பொதுவாக, வீடுகள் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் கொசுக்கள் சுமார் ஆயிரம் அடி தொலைவுகளுக்குள்ளாகவே நடமாடும் தன்மையைக் கொண்டதாக இருக்கின்றன. எனவே, அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்யும் ஒருவகை கொசுக்கள் இருக்கின்றன. அவை, கடற்கரை அருகிலுள்ள நீர்நிலைகளில் வாழ்கின்றன. அவை, முட்டையிடுவதற்குத் தேவையான புரதச் சத்தினைப் பெறுவதற்காக மனிதர்களையும், விலங்குகளையும் தேடி 75 மைல் தொலைவுகள் வரை பயணிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன.
பொதுவாக, ஆண் கொசுக்கள் ஒரு வாரம் மட்டுமே வாழ்கின்றன. ஆண் கொசுக்கள் முட்டையிலிருந்து வாழ்க்கை சுழற்சியின் மூலம் மூதுயிரியாக வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கின்றன. அதன் பிறகு, ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக் கொண்டு சில நாட்கள் வாழ்ந்து மறைகின்றன. ஆனால், பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதம் வரை உயிருடன் இருக்கின்றன. அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டு விடுகின்றன. அந்த முட்டைகள் 48 மணி நேரத்திற்குள்ளாகப் பொறிக்கப்பட்டு, குடம்பி (லார்வா புழு) ஆகின்றன. பின்னர், அது கூட்டுப்புழுவாக மாறி, அதனைத் தொடர்ந்து மூதுயிரியாக, கொசுவாகத் தோற்றம் பெறுகின்றன.
பெண் கொசுவானது ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகள் வரை இடுகிறது. இந்த வேகத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதால், ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியைத் தொட்டுவிடுகிறது. எனவே, கொசுக்களை முழுமையாக அழிப்பது என்பது இன்று வரை முடியாததாகவேத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும், உலகம் முழுவதும் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசுவின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொசு பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், மனிதர்கள் வாழிடங்களில் இருக்கும் தேங்கும் நீர்நிலை, வடியாத மழை நீர், திறந்தவெளிச் சாக்கடைகள், மூடப்படாத நீர் இருக்கும் பாத்திரங்கள், குப்பைத் தொட்டிகள் போன்றவைகளைக் கண்காணித்து, அதில் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிக அளவில் பரவாமல் தடுத்துக் கொண்டு வருகின்றனர். அதனால், கொசுக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம், உலகில் கொசுக்களால் பரப்பப்படும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருக்கின்றன. உலகில் 2010 ஆம் ஆண்டில் 239 மில்லியன் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 219 மில்லியன் எனும் அளவில் குறைந்திருக்கிறது. இதன் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டக் காலத்தில், மலேரியாவினால் ஏற்படும் பாதிப்புகள் 18% எனும் அளவில் குறைந்திருக்கிறது. இதே போன்று, உலகம் முழுவதும் மலேரியாவினால் ஏற்படும் உயிரிழப்புகளும் 28% எனும் அளவில் குறைந்திருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்கப் பகுதிகளில் இந்தச் சுமையானது மிகப் பெரியதாக இருக்கிறது. அதாவது, உலகம் முழுவதும் 2017 ஆம் ஆண்டில் 4,35,000 பேர் மலேரியா நோயினால் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் 4,03,000 பேர் ஆப்பிரிக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அங்கு மலேரியாவினால் இறந்தவர்கள் 93% என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்புகளில் 61% மலேரியாவினால் ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதிகளைத் தொடர்ந்து, மலேரியாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் 5% மற்றும் கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் 2% எனும் அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 80% உயிரிழப்புகள் ஆப்பிரிக்கப் பகுதிகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன.
இதே போன்று, உலக அளவில் 2016 ஆம் ஆண்டில் 128 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3.9 பில்லியன் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெங்குவின் கடுமையான பாதிப்பால் ஆண்டுக்கு 96 மில்லியன் பேர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். உலக அளவில் 2015 ஆம் ஆண்டில் 38.5 மில்லியன் பேர் யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 54 நாடுகளில் 950 மில்லியன் மக்கள் இந்த நோய்க்கான ஆபத்தில் இருக்கின்றனர். வெப்ப மண்டல நாடுகளான ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இந்நோய் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. இந்த நோய்கள் மட்டுமின்றி, கொசுக்களினால் பரப்பப்படும் வேறு சில நோய்களும் அதிகம் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
உலகம் முழுவதும் கொசுவின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் முயற்சிகளில் அரசுகளும், பல தன்னார்வ அமைப்புகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. கொசுகளின் இனப்பெருக்கம், கொசுக்களின் மூலம் மனிதர்களுக்கு கடத்தப்படும் பல்வேறு கடுமையான நோய்கள், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான பாதிப்புகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருத்துவச் சிகிச்சைகள், மக்கள் தங்கள் வாழிடங்களில் சுற்றுப்புறத்தைச் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்தல், கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் போன்றவைகளை மக்களுக்கு எடுத்துச் சென்று, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கு உலகக் கொசு நாள் முக்கியமான நாளாக இருக்கிறது.
இந்நாளினைப் பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டு செல்வதுடன், அந்நாளில் அவர்களுக்குக் கொசுவால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துச் சொல்வதுடன், கொசுவின் இனப்பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பினைப் பெற்றிடவும், அப்பணிகளுக்கு உதவிடவும் வலியுறுத்த வேண்டும். இதன் மூலம், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கொசுவின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஆர்வம் ஏற்படும். கொசுக்களினால் ஏற்படும் கடுமையான நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வும் ஏற்படும்.