கோயிலுக்கு வந்திருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அர்ச்சகர்கள் சிலர், "கடவுளுக்கு படைக்க வைத்திருக்கும் பிரசாதங்களையெல்லாம் எறும்புகள் மொய்த்து விடுகின்றன. இதனால், கடவுளுக்கும் படைக்க முடியவில்லை; பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை" என முறையிட்டனர்.
அதைக் கேட்ட பரமஹம்சர், "இனிமேல் பிரசாத தட்டுகளைச் சுற்றிலும் சர்க்கரையைப் தூவி விடுங்கள். எறும்புகள் உள்ளே வராது" என்றார்.
அதேபோல செய்ததும், எறும்புகளெல்லாம் அந்தச் சர்க்கரையை மட்டும் மொய்த்து விட்டு அப்படியேத் திரும்பிப் போய்விட்டன.
தட்டின் மேலேப் பிரசாதங்கள், எறும்பு மொய்க்காமல், அப்படியே இருந்தன.
அப்போது பரமஹம்சர், "இந்த எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்கள், வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கின்ற அற்ப மகிழ்ச்சியில் மயங்கி மேற்கொண்டு முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்" என்றார்.